அம்பாளுக்கும் ஆண்டாளுக்கும் உரிய ஆடிப்பூரம் இன்று : அவசியமாக செய்ய வேண்டியவை என்ன

0
184

ஆடிப்பூரம் அம்பாளுக்கும் ஆண்டாளுக்கும் உரிய நாள். அன்றைய நாளில்தான் அம்பாள் பெண்மை அடைந்ததும், உமா மகேஸ்வரியாக அவதரித்ததும், ஆண்டாளாக அவதரித்ததுமாகும். இதனால்தான் எல்லாம் அம்மன் ஆலயங்களிலும் சடங்குகள் , சம்பிரதாயங்கள், விஷேட பூசைகள் நடக்கின்றன.

இந்த நாளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு, குங்குமக் காப்பு, வளைகாப்பு, வளையல் அலங்காரம் ஆகியவை பக்தர்களால் நடத்தப்படுகின்றன. இந்த ஆடிப்பூர தினத்தை வளைகாப்பு நாளாகக் கருதி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்து பெருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

அதற்குக் காரணம் மூன்றாம் மாதத்தில் (பங்குனி உத்தரம் ) நிறைய பெண் தெய்வங்களுக்கு திருமணம் நடந்தது. அதன் படி திருமணம் ஆகி கருவுற்று ஐந்தாவது மாதம், ஏழாவது மாதம், ஒன்பதாவது மாதம் வளைகாப்பு நடத்துவது வழமை இதன் அடிப்படையில் ஆடி மாதம் அம்பாளுக்கு உரிய ஐந்தாவது மாதம் என்பதால் வளைகாப்பு மாதமாக எல்லா அம்மன் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்துக்குக் காத்துக் கொண்டிருப்பவர்கள், ஆடிப்பூரம் அன்று அம்பாள் வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆடிப்பூரம் நாளில் அம்பாளுக்கு வளைகாப்பு செய்தால், அடுத்த வருடத்துக்குள் உங்கள் வீட்டில் குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருக்கும் பெண்ணுடைய கையில் வளைகாப்பு இருக்கும். திருமணத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பெண்கள், அம்பாளுக்கு போட்ட வளையலைக் கையில் போட்டுக் கொண்டால், திருமணமாகாத அந்த பெண்ணுடைய கையில், அடுத்த வருடம் திருமண வளையல் நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த வழிபாடுதான் ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு செய்யக்கூடிய வளைகாப்பு வழிபாடு. ஆலயங்களில் அம்பாளுக்கு வளையலால் அலங்காரம் செய்து வளைகாப்பு நடத்தப்படும். அதேபோல நம்முடைய வீட்டிலும் அம்பாளுக்கு வளைகாப்பு செய்யலாம்.

ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளைத் தான் ஆடிப்பூரமாக கொண்டாடுகின்றோம். ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதரித்ததாக ஐதீகம். ஆண்டாள் அவதாரம் செய்த இந்த நாளை ஆடிப்பூரத் திருநாளாகக் கொண்டாடி வருகின்றோம். ஆடிப்பூரம் என்றால் அது முழுக்க முழுக்க அம்பாளுக்கு உரிய தினம். இந்த நாளில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

அம்பாளை நினைத்து விரதம் இருந்து வழிபடலாம். அதிகாலை வேலையிலேயே பெண்கள் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றிக் குலதெய்வத்தை நினைத்து, அம்பாளை நினைத்து விரதத்தைத் தொடங்குவார்கள். பெண்கள் பச்சை நிற புடைவை அல்லது றோஸ் நிற புடைவையை அணிந்து கொண்டு வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. ஒரு பாத்திரம் நிரம்ப குடிக்கும் தண்ணீர் எடுத்து, அதில் கொஞ்சம் துளசி இலைகளை போட்டு இந்த துளசி தீர்த்தத்தை நாள் முழுவதும் பருகி விரதம் மேற்கொள்ளலாம். கூடவே பால் பழம் போன்ற பொருள்களை சாப்பிட்டு விரதத்தை தொடரலாம். மனம் உருகி அம்பாளிடம் உங்களுடைய வேண்டுதலை வைத்து நாள் முழுவதும் அம்பாளின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே விரதம் இருக்கலாம்.

மாலை வேளை ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று அம்பாளின் வளைகாப்பு தரிசனத்தை மேற் கொள்ளலாம். அம்பாளை பார்க்க செல்லும் போது ஒரு தாம்பூல தட்டில், வெற்றிலை, பாக்கு, பூ பழம், வளையல் வாங்கி வைத்து அம்மனுக்கு சீர் எடுத்து செல்லுங்கள். உங்களால் முடிந்த கலவை சாதத்தை நைய்வேத்தியமாக கொடுத்து வழிபாட்டை மேற் கொள்ளலாம்.

நீங்கள் வாங்கி சென்ற வெற்றிலை, பாக்கு, பூ, பழம், வளையலை யாராவது ஒருவருக்கு தானம் கொடுப்பதும் சிறப்பு. அதிலிருந்து கொஞ்சம் வளையலை எடுத்து நீங்களும் போட்டுக் கொள்ளலாம்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் நிம்மதி இல்லை, கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவோடு இருப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்

விபுலாமனி – வி.ரி.சகாதேவராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here