இலங்கை அரசாங்கத்தின் அடுத்த கட்டம் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாகும். அது பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் மற்றும் அரசாங்கக் கட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கலாம். இந்த வகையான அரசாங்கம் சுமார் ஆறு மாத காலத்திற்கு வரையறுத்த நிகழ்ச்சி நிரலையும், இறைமையையும் கொண்டிருக்கும்.

அதன் செயல்பாடுகள் குறுகிய கால நிகழ்ச்சித் திட்டங்களாக அமைய வேண்டும். எனவே இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் உடன்பாடு காண வேண்டும்.

அரசியல் மட்டத்தில் இடைக்கால அரசாங்கம் எடுக்க வேண்டிய பல முக்கிய நடவடிக்கைகள் உள்ளன. புதிய அரசாங்கம் கொடூரமான நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்கு முதலில் நாட்டில் நிலவும் அரசியல் பதட்டத்தைத் தணிக்க வேண்டும்.

இதற்கு ஜனாதிபதியின் ராஜினாமா மட்டுமல்ல, பிரதமரும் ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ரணில் விக்ரமசிங்கவுக்கு சட்டபூர்வத் தன்மை கிடையாது. அவர் மக்கள் விருப்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அல்ல. மேலும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பதை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விரும்பவுமில்லை. அவர் உண்மையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களின்படி ராஜபக்ச குடும்ப நலன்களின் ஆதரவாளராகவும் பாதுகாவலராகவும் தன்னை மாற்றிக்கொண்டவர்.

*எனவே பிரதமருக்கு நம்பகத்தன்மை மட்டுமின்றி சட்டபூர்வத் தன்மையும் இல்லை. எனவே, அவர் ராஜினாமா செய்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத்தை அனுமதிக்க வேண்டும்.*

பொருளாதார நெருக்கடியைப் பொறுத்தவரை, இலங்கை அரசாங்கம் சில வாரங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரிச் சென்றது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகிவிட்டது.
எனவே ஒரு ஆரம்ப கட்ட உடன்பாட்டுக்கு வந்தாக வேண்டும். நிதி அமைச்சு அல்லது மத்திய வங்கி அதிகாரிகளை கொண்ட இலங்கை தரப்புக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு வேலைத் திட்டம் வரையப்பட வேண்டும்.

இதற்கு நிச்சயமாக அரசியல் ஆதரவு தேவை. அந்த வகையில் இலங்கையில் சட்டபூர்வமான ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் இருக்க வேண்டும். கொழும்பில் ஒரு நிலையான அரசாங்கமும் இருக்க வேண்டும், அது சட்டபூர்வமானதுடன், மக்கள் ஆதரவையும் பெற்றிருக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச கடன் வழங்குபவர்கள் இதைத்தான் எதிர்பார்த்து நிற்கின்றனர். அதன் பிறகு IMF மற்றும் உள்ளூர் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை தொடர புதிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு இருக்க வேண்டும். ஏனெனில் நிறைய தனியார் கடன் வழங்குநர்கள் உள்ளனர். ஆனால் இலங்கை தனது கடன்களைத் திருப்பிச் செலுத்தாத நிலையில் உள்ளதால், கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் சட்டபூர்வமான மற்றும் சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய நிலையான அரசாங்கம் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இது இலங்கை கவனத்திற் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும் .

அதே சமயம், சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதால் மட்டும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைத்து விடாது. அதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம்.

முதலாவது: கடன் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கென்று பிரத்யேகமாக சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் இலங்கைக்கு நிதியுதவி வழங்காது.

மாறாக அது என்ன செய்யும் என்றால், தனியார் கடனாளர்களுடன் இலங்கையின் கடனை திருப்பிச் செலுத்தும் செயல்முறையை எளிதாக்கும். மேலும் ஐஎம்எப் இடம் பல வருட கடன் மீட்பு திட்டமும் உள்ளது .

இரண்டாவது: சர்வதேச நாணய நிதியத்தில் உதவி பெறுவதற்கு ஏறாளமான நிபந்தனைகள் உள்ளன. அவற்றை முன்கூட்டியே செயல்படுத்துமாறு கட்டாயக் கோரிக்கையாக முன்வைக்கும்.

எடுத்துக்காட்டாக, அரசாங்கம் பொதுச் செலவினங்களைக் குறைத்து வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும். மேலும் நேரடி மற்றும் மறைமுக வரிகளை அதிகரிக்கும் புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்தும். பொதுத்துறையில் வேலைவாய்ப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கும் .

மேற்கூறிய நிபந்தனைகள் அனைத்தும் கண்டிப்பாக மிகப் பெரிய சமூக விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில், இதுவரை யாரும் பேசாத மிகக் கடுமையான சமூக நெருக்கடியை இலங்கை அனுபவித்து வருகிறது.

இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் வறுமையின் அவலங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. மற்றும் மக்கள் வேலைகளையும் வருமான மூலங்களையும் இழந்துள்ளனர். அதனால் நாட்டில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பை நிறையவே காணுகிறோம். மேலும் சமூக நெருக்கடிகள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் எழுச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, IMF கொத்து கொத்தாக முற்படுத்தும் நிபந்தனைகள் சமூக நெருக்கடியை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது நாட்டில் அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும். அதனால் சமாளிப்பதற்கு மிகவும் கடினமான நெருக்கடி நிலையை இலங்கை எதிர்கொள்ள வேண்டி வரும்.

எந்தவொரு இடைக்கால அரசாங்கமும் சில ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் தெரிவு செய்த பின்னர் கொழும்பில் நிலையான அரசாங்கம் உருவாக வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.

ஆனால் இந்த *பாராளுமன்றம் சட்டபூர்வ தன்மையை இழந்து நிற்கிறது.* காரணம் தற்போதுள்ள பாராளுமன்றம் ஜனநாயக வழியில் வந்ததல்ல. இது வடிகட்டிய எதேச்சதிகார சர்வாதிகாரியை தெரிவு செய்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றமாகும்.

எனவே, அத்தகைய பாராளுமன்றத்தால் ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியாது. இலங்கைக்கு ஒரு புதிய பாராளுமன்றம் தேவை, காரணம் மக்கள் கருத்து கடுமையாக மாறியுள்ளது. 2019 இல் இருந்த நிலைமை இப்போது இல்லை.

எனவே இலங்கையின் தற்போதைய பாராளுமன்றம் ஆளும் கட்சியின் முழுமையான பெரும்பான்மையுடன் இருப்பதால், நாட்டு மக்களின் உண்மையான கருத்தையும் அரசியல் சமநிலையையும் பிரதிபலிக்கவோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தவோ மாட்டாது. எனவே நாட்டில் நிலவும் உண்மையான அரசியல் சமநிலையையும் மக்கள் கருத்தையும் பாராளுமன்றம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய பாராளுமன்றம் ஒன்று தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

மற்றுமெரு சாரார், புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப் படுத்தும் வகையில் அதன் திட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக கருதுகிறார்கள்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், எந்த ஒரு அரசாங்கமும் சில மாதங்களில் செல்வாக்கற்றதாகிவிடும். அதாவது ஒவ்வொரு முறையும் மக்கள் கருத்து மாறும்போது அவர்கள் மீண்டும் தேர்தலுக்கு செல்ல வேண்டும். இதுதான் வாடிக்கையாய் போயுள்ளது.

*இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வழி உள்ளது.* அதாவது இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பொருளாதார மீட்சியின் சுமையை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மீது சுமத்தாத சீர்திருத்தப் பொதிக்காக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தொடர்ந்து காணப்படும் பிரச்சனை என்னவென்றால், IMF அல்லது உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அவர்கள் இலங்கைக்கு ஆணையிடும் விதிமுறைகளையும் நிபந்தனை பொதிகளையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக்கொள்வதாகும்.

ஆதரவையும் உதவியையும் கோரும் இலங்கை, நிபந்தனைகளை விதிக்கும் நிலையில் இல்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. ஏனெனில் சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதையே எதிர்பார்க்கிறது.

கடந்த ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியை சந்தித்த பொருளாதார பிரதிநிதிகளின் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் அந்த சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் இல்லை. அவர்களோடு எதிர் வாதம் செய்வதும் இல்லை. இந்நிலை மாற வேண்டும்.

புதிய அரசாங்கம் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் ஒரு புதிய அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். மற்றும் மறைமுக வரிகள் மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீது பொருளாதார மீட்சியின் சுமையை சுமத்துவது உண்மையில் நிலைமையை படுமோசமாக்கி விடும். ஏனெனில் மக்கள் தொழில்களை இழந்துள்ளனர். உண்மையான வருமானம் பாரிய அளவில் அளவில் குறைந்துள்ளது.

இலங்கைக்கு ஒரு வலுவான மனிதாபிமான நியாயம் உள்ளது. எனவே பொருளாதார வீழ்ச்சியிலிருந்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைப் பாதுகாக்கும் கொள்கைகளை வகுத்து வலுவான ஆதாரங்களுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக வேண்டும்.

தற்போதைய இந்த இக்கட்டான காலகட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு ஆளுமை தான் இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க பொருத்தமானவர் என்று பெருமளவிலான மக்கள் நினைக்கிறார்கள் அல்லது நம்புகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க சர்வதேச சமூகத்தை எதிர் கொள்வதற்கான திறனும் மற்றும் சர்வதேச அமைப்புகளை அணுகுவதற்கான சாமர்த்தியமும் உள்ளவர் என ஊடகங்களும் சில அரசியல் கட்சிகளும் ஒரு பெரிய கட்டுக்கதை மக்கள் மனங்களில் உருவாக்கியுள்ளன.

ஆனால் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் பக்கம் உள்ள தொழில்முறை பொருளாதார வல்லுநர்களிடம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் நிலைப்பாடுகளை சவால் விட போதுமான புலமையும் தகுதியும் இல்லை. எனவே புதிய அரசாங்கத்தில் உள்ள நிதியமைச்சர் இலங்கையின் பொருளாதார கொள்கை வகுப்பாளர்களுக்கு அரசியல் வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.

போராட்டக்காரர்கள் வலியுறுத்தும் ஆட்சி மாற்றக் கோ‌ரி‌க்கையில் மூன்று முக்கிய மாற்றத்துக்கான நிலைகள் உள்ளன.

*முதலாவதாக, தற்போது அதிகார வெறிபிடித்த ஊழல் அரசியல் கும்பல்களினால் நாடு நடத்தப்படுகிறது.*
சட்டத்திற்கு அப்பாற்பட்ட மக்கள் முன்னிலையில் வகைகூறும் பொறுப்பற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு பொருத்தமற்ற அரசியல் அமைப்பாகும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதிக ஜனநாயகத்துடன் கூடிய மக்கள் சார்ந்த அரசியல் அமைப்பு உருவாக வேண்டும்.

*இரண்டாவதாக ஆட்சி மட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டிய மாற்றங்கள்.* இலங்கையில் ஜனநாயகமற்ற, ஊழல் மற்றும் பொறுப்புக் கூற முடியாத ஆட்சி முறை உள்ளது. அது முடிவுக்கு வர வேண்டும். பின்னர் சிறுபான்மையினர் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்படுவது இல்லாமலாக்கப்பட வேண்டும். ஒற்றைப் பெரும்பான்மை நாடாக மாறியுள்ள இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றம் வர வேண்டும். சிறுபான்மையினருடன் அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டு ஒவ்வொரு தரப்பும் சமமாக நடத்தப்பட வேண்டும்.

*மூன்றாவது நிலை ஜனநாயகம் குறித்த நிலைப்பாடாகும்.*
ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கையின் தற்போதைய பிரதிநிதித்துவ ஜனநாயக முறையை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், பாராளுமன்றம் சென்றுள்ள அரசியல் கட்சிகள் மக்களின் அபிலாஷைகளை விட்டும் வெகு தொலைவில் இருப்பதாகவும், ஊழல் நிறைந்த அமைப்பினால் இயங்குவதாகவும் கூறுகின்றனர்.

உண்மையில், முழு ஜனநாயக அமைப்பிலும் ஊழல் புற்று நோயாக படர்ந்துள்ளது. தேர்தல் செயல்முறையும் சிதைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் வழங்கிய ஆணையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.

*ஜனநாயகத்தின் பலப்படுத்த வேண்டும்*

எனவே தற்போதைய பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அனைத்து பலவீனங்களையும் குறைபாடுகளையும் இரண்டு வழிமுறைகளில் தீர்ப்பதற்கு அவர்கள் விரும்புகிறார்கள்.

முதலாவது இலங்கையின் தற்போதைய பிரதிநிதித்துவ ஜனநாயக முறையின் குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்தல்.

இரண்டாவது நேரடி ஜனநாயகம் மற்றும் மக்கள் இறையாண்மை ஆகியவற்றின் கூறுகளை ஜனநாயக செயல்முறையில் அறிமுகப்படுத்தல்.

அதனால்தான் அவர்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை நேரடி ஜனநாயகத்துடன் இணைக்க விரும்புகிறார்கள், அதற்கு அரசியலமைப்பு மாற்றம் மட்டுமல்லாமல் புதிய அரசியலமைப்பு மாற்ற சிந்தனையும் தேவைப்படுகிறது.

பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நெருக்கடியை வரையறுத்துக் கொள்வது எவ்வாறு என பழமைவாத சிந்தனையில் உள்ள அரசியல்வாதிகளால் இயலாமல் இருப்பதும் இலங்கையின் அரசியல் பிரச்சினையில் உள்ளதாகும்.

பிரதிநிதித்துவ ஜனநாயக முறையின் மூலம் நேரடி ஜனநாயகத்தின் சில முக்கிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை மீட்டெடுப்பதும் மொத்த மாற்றத்தில் உள்ளடங்கும்

தமிழ் வடிவம்: முஹம்மத் பகீஹுத்தீன்.

From – FB – Siraj Mashoor