நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமரும் தோல்வியடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதனால் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலகி சர்வ கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

புதிய பிரதமர் பதவி ஏற்றதன் பின்னர் சர்வதேச அளவில் ஆதரவு பெருகி நாட்டு மக்களுடைய பிரச்சினைகள் தீரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எரிபொருள் வரிசை நீண்டு கொண்டே செல்வதாகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே செல்வதாகவும் மருந்து பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் உதயகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதாக கூறி தற்போது ஆசியாவின் அவலமாக மாற்றி உள்ளனர் என மயில்வாகனம் உதயகுமார் கவலை வெளியிட்டார்.

இந்த செயற்பாடுகள் காரணமாக நாளாந்தம் வரிசைகளில் மக்கள் உயிரிழப்பதாகவும் பட்டினியால் மக்கள் உயிரிழப்பதாகவும் விரக்தியால் மக்கள் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமை நாட்டில் நீடிக்கக் கூடாது எனவும் உடனடியாக சர்வதேசத்தின் உதவியை பெற வேண்டுமாயின் நாட்டில் நிலையான அரசாங்கமொன்றை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தற்போதைய சூழ்நிலையில் சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதே சிறந்த தீர்வாக அமையும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.