ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருகோணமலையில் இருந்து சென்றவர்கள் வெருகல் பாலத்தில் வைத்து தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் அக்கப்பட்ட சங்கத்தினரால் மட்டக்களப்பு – கல்லடியில் இன்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருகோணமலையில் இருந்து பஸ் ஒன்றில் சென்றவர்களை வெருகல் பாலத்தில் உள்ள பொலிஸ் சேதனைச்சாவடியில் வைத்து காலை 7.45 மணியளவில் வழிமறித்த பொலிசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் அவர்களிடம் பஸ் டிக்கட்டுக்களை கேட்டதாகவும் பின்னர் அவர்கள் அனைவரையும் பஸ்ஸில் இருந்து இறக்கி விசாரணைக்கு உட்படுத்தியதுடன், பஸ்ஸையும் சேதனைக்கு உட்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். இதன்போது ஆர்ப்பாட்டத்திற்காக கொண்டு சென்ற பதாகைகளும் ஏனைய பொருட்களும் காணப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

இதன் பின்னர் அனைவருடைய விபரங்களையும் பெற்றதுடன் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரின் ஆவணங்களையும் பறித்து இதை மீறிச் சென்றால் வழக்கு தாக்கல் செய்வதாகவும் குறிப்பிட்டதோடு புகைப்படங்களை எடுத்தவர்களுடைய கைத் தொலைபேசியை வாங்கி அனைத்தையும் அழித்துவிட்டு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர் குறித்த பஸ் மீண்டும் திருகோணமலைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் 53 பேர் குறித்த பஸ்ஸில் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதில் 43 பெண்களும் 10 ஆண்களும் அடங்குகின்றனர்.

 

திருமலை நிருபர்