இருபது இலட்சம் பேருக்கு நிரந்தர காணி உரிமையும், இரண்டரை இலட்சம் பேருக்கு முழுமையான வீட்டு உரிமையும் வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி – ஜனாதிபதி.

0
74

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீடு தீவைத்து அழிக்கப்பட்ட போது, ஒரு வீட்டின் பெறுமதியை கடுமையாக உணர்ந்ததாகவும் அதன் பெறுமதியை உணர்ந்ததாலேயே கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 2,50,000 பேருக்கு அந்த வீடுகளின் முழுமையான உரிமையையும் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்ற, இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் பூரண உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 வீடுகளை வழங்கும் “ரன்தொர உறுமய” வீட்டு உரிமை வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் 31 அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைந்துள்ள 130 வீடுகளுக்கான உரிமைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதன்போது அடையாளமாக ஜனாதிபதி சிலருக்கு வீட்டு உரிமைகளை கையளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவின்படி, 2024 வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இரண்டரை இலட்சத்துக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் முழு உரிமையை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மாதாந்தம் 3000 ரூபா அல்லது அதற்கும் குறைவான வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட அனைத்து வீடுகளுக்காகவும் 150,000 ரூபாவினை செலுத்தி முடித்திருப்போர் மற்றும் இதுவரையில் அந்த தொகையினை செலுத்தாமல் இருந்து ஒரு மாதத்திற்குள் அந்தத் தொகையை செலுத்தி முடிப்போர் உள்ளடங்களாக 50,000 பயனாளி குடும்பங்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் முழுமையான வீட்டு உரிமை வழங்கப்படும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 1070 பயனாளிகளுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“உறுமய திட்டத்தின் மூலம் 20 இலட்சம் பேருக்கு இலவச காணி உரிமையும், 50,000 பேருக்கு வீடுகளுக்கான முழு உரிமையும் கிடைக்கும். காணியும் வீட்டு உரிமையும் கிடைப்பதென்பது இந்த நாட்டு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்கு இயன்றளவு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த மக்களுக்கு அந்த வீட்டின் முழு உரிமையும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இன்று நாங்கள் கூடியுள்ளோம். இந்நாட்டு மக்கள் அவதியுறும் வேளையில் ‘உறுமய’ வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். அந்த மக்கள் அனைவருக்கும் அரசாங்கத்தால் முடிந்த உதவிகளை செய்தோம்.

மக்களுக்கு உரிமைகளை வழங்குவதில் முக்கியமாக கவனம் செலுத்தினோம். காணியின் உரிமை அல்லது வீட்டின் உரிமை மிகவும் முக்கியமானது. இதுதான் மக்களின் எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினோம். இரண்டு வருடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிந்தது.

இவற்றையெல்லாம் செய்வதற்கு முன், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். மேலும் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் எதிர்காலம் குறித்து அனைவரும் அச்சத்துடன் இருந்தனர். இன்று நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளோம். இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியிருக்காவிட்டால், நமது நாடு மற்றொரு லெபனானாகவும், கென்யாவாகவும் மாறியிருக்கும்.

இன்று நாட்டில் நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அனுகூலத்தை மக்களுக்கு வழங்குவதற்காக நாம் செயற்பட்டு வருகின்றோம். இரண்டே ஆண்டுகளில் இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க முடிந்தது. இந்நாட்டு விவசாயிகளுக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும் என நான் நீண்டகாலமாக கூறி வருகின்றேன். அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது வீடு எரித்து நாசமாக்கப்பட்ட போது வீட்டின் மதிப்பை நன்கு உணர்ந்தேன். அந்த இடத்திற்கு யாரையும் வரக்கூட அந்த குழுவினர் அனுமதிக்கவில்லை. விமானப்படை தீயை அணைக்க வந்தால் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய நேரிட்டிருக்கும். தீவைக்க வந்தவர்களை சுட்டுக் கொல்வதை நான் விரும்பவில்லை. அந்த வீட்டில் இருந்த எனது புத்தகங்கள் உட்பட அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

அந்த நேரத்தில், ஒரு வீட்டின் மதிப்பை மிகக் கடுமையாக உணர்ந்தோம், எனவே மக்களுக்கு சொந்த வீட்டு உரிமையை வழங்குவதற்காக இந்த திட்டத்தை தொடங்கினோம். எனவே உறுமய திட்டத்தை கிராமத்திற்கு மட்டுப்படுத்தாமல் நகரத்திற்கு கொண்டு வர முடிந்தது. கிராமங்களில் 20 இலட்சம் பேருக்கு உறுமய திட்டத்தின் கீழ் காணி உரிமை கிடைக்கும். கொழும்பில் இரண்டரை இலட்சம் பேருக்கு வீட்டு உரிமை கிடைக்கும். இந்த வீடுகளை நீங்கள் பாதூக்கக வேண்டும். மேலும் அதை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். அதில் உங்கள் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். எனவே, இது உங்கள் வாழ்வில் கிடைத்த ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாகக் கருதுகிறேன்.

மக்களுக்கு இயன்ற அளவு நிவாரணம் வழங்க அரசு என்ற வகையில் செயல்பட்டு வருகிறோம். இந்த நாட்டு மக்கள் படும் இன்னல்களை நாம் அனைவரும் அறிவோம். நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அந்த மாற்றம் கோஷம் எழுப்பியோ, தெருவில் கூச்சலிடுவதோ அல்ல. மனுக்களில் கையெழுத்திட்டு அந்த மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு குறிக்கோள் இருந்தால், அந்த இலக்கின் படி செயற்பட வேண்டும்.

நம் நாட்டை இன்றைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. சமுர்த்தி நிவாரணம் போன்று அஸ்வெசும திட்டத்தின் மூலம் மக்களுக்கு மூன்று மடங்கு நன்மைகளை வழங்கினோம். அத்துடன் நாட்டின் நெல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதுடன் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 02 மாதங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்தோம். விவசாயம் முன்னேற்றமடைந்தது. உறுமய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கான உரிமையை வழங்கவும் நடவடிக்கை எடுதுள்ளோம்.

எங்களின் அர்ப்பணிப்பினால்தான் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந்தது. ஏன் ஏனைய அரசாங்கங்களால் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை? எனவே இந்த அமைச்சர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூற வேண்டும். இந்த செயற்பாடுகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர வேண்டும்.

நாங்கள் பெற்ற வெளிநாட்டுக் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பது குறித்து எங்களுக்குக் கடன் வழங்கிய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனும், சீனாவின் எக்சிம் வங்கி மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடனும் நாம் உடன்பாட்டை எட்டியுள்ளோம். அதன்படி நாங்கள் செலுத்த வேண்டிய கடனில் இருந்து 08 பில்லியன் ரூபாவை குறைந்துள்ளது.

அதேபோன்று, கடனை திருப்பிச் செலுத்த 2042 வரை கால அவகாசம் கிடைத்ள்ளது. எனவே இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். யாரும் பழைய நிலைக்குச் செல்ல விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். சர்வதேச நாணய நிதியத்துடனான இந்த ஒப்பந்தத்தை நாம் பாதுகாக்காவிட்டால், எதிர்காலத்தில் ஒரு நாடு என்ற வகையில் மிகவும் கடினமான சூழ்நிலையை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், நாம் எப்போதும் கடன் பெற முடியாது. எனவே, நாம் வருமானம் ஈட்டக்கூடிய ஏற்றுமதி பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும்.

இந்த இரண்டு இலக்குகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும். எவருக்கும் இதனை மாற்ற இடமளிக்க வேண்டாம். உங்களின் எதிர்காலம் இன்று உங்கள் கைகளிலேயே இருக்கின்றது. மேலும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். மேலும், அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை நியமித்துள்ளோம்.

ஓய்வு பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு திறைசேரி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த ஆண்டு இறுதிக்குள் நாம் நிதி ஒதுக்க வேண்டும். எதிர்காலத்தில் குறைந்த வட்டி விகிதத்தை பேணுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

வர்த்தகத்தை மேம்படுத்துவற்கு வங்கி வட்டியை குறைந்த அளவில் பேண வேண்டும். ஆனால் வட்டி விகிதங்கள் குறையும் போது, ஓய்வூதியம் பெறுவோருக்கு அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே அதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு திறைசேரி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

உங்களை விட உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு அவசியமான சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். இன்று மக்களுக்கான உரிமைகளை வழங்குவதன் மூலம் நாம் அதற்காக செய்யக்கூடிய சிறந்த செயற்பாடை நாம் நிறைவேற்றியுள்ளோம் என்று நான் நம்புகிறேன்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

“2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து, இருபது இலட்சம் பேருக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்த போது, எதிர்க்கட்சியின் சில குழுக்கள் அந்தப் பிரேரணையை அலட்சியப்படுத்தின. ஆனால் ஜனாதிபதி அப்போது சிரித்துக் கொண்டே உறுமய காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு எமக்குப் பணிப்புரை விடுத்தார்.

இன்று உறுமய காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு அந்த வீடுகளின் முழுமையான உரிமையை வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் உரிமைப் பத்திரங்களைப் பெறுவதன் மூலம், ஒரு பிள்ளையை பாடசாலையில் சேர்க்க, அறுவை சிகிச்சை ஒன்றுக்கு பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வங்கிக் கடன் பெற முடிகின்றது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், இதே நாளில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருந்த ஒரே வீடு போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. அந்தப் போராட்டக்காரர்கள் எரித்தது வீட்டையல்ல, ஒரு வரலாற்றை. அந்த வீட்டில் பெறுமதிமிக்க நூலகம், மதிப்புமிக்க சிலைகள், மதிப்புமிக்க ஓவியங்கள் போன்று பல பொருட்கள் இருந்தன.

அவர் தனது வீட்டை இழந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன நிலையில், உங்களின் வீட்டு உரிமையை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக எமது தலைவர்கள் பதவி விலகிச்செல்லும் போது, வர்த்தகர்கள், கற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது நாட்டிற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் முன்னோக்கி வந்த ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே.

நெருக்கடி காலங்களில் மட்டுமே ஒரு உண்மையான தலைவரை கண்டுகொள்ள முடியும். ரணில் விக்ரமசிங்க நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் பொறுப்பை ஏற்று நாட்டை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்ததுடன்,அஸ்வெசும மற்றும் உறுமய போன்ற வேலைத்திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பணியாற்றினார்.” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here