இளைஞர் ஒருவரின் தங்க நகை மற்றும் விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசி என்பவற்றைக் கொள்ளையடித்தார்கள் என்ற சந்தேகத்தில் மாலபே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களில்   பொலிஸ் சார்ஜன்ட் உட்பட மூன்று கான்ஸ்டபிள்கள் உள்ளடங்குவதாக தெரியவருகிறது. கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் திருடப்பட்ட தங்க நகை மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 20ஆம் திகதி வலஸ்முல்லை வீரகட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் கொட்டாவ வித்தியால சந்தியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு முன்பாக உள்ள வீதியில் நின்றுள்ளார். இதன்போது முச்சக்கர வண்டியில் வந்த மேற்படி  நபர்கள் இளைஞரிடம் காணப்பட்ட தங்க நகை மற்றும் கைத்தொலைபேசியை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.