அமரர் கல்கியின் `பொன்னியின் செல்வன்’ நாவல் பல கதாபாத்திரங்களைக் கொண்ட பிரமாண்ட நாவல். தற்போது அந்த நாவல் மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டு இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் முதல்பாகம் எதிர்வரும் 30ஆம் திகதி திரையிடப்படவுள்ளது.
அதையொட்டி பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய கதாப்பாத்திரங்கள் பற்றிய ஒரு பார்வையாகவே இக்கட்டுரை அமைகின்றது. இதில் குந்தவை எனும் கதாப்பாத்திரத்தை த்ரிஷா ஏற்றிருக்கிறார்.
குந்தவை சுந்தர சோழனின் மகள், ஆதித்த கரிகாலனின் அன்புத் தங்கை மற்றும் அருள்மொழி வர்மனுக்கு தாய் போல அறிவுரைகள் சொல்லும் அக்கா. சோழ பேரரசின் திறமை மிகுந்த இளவரசி.
அறிவும் அழகும் ஒருசேர அமைந்தால் அது பேரழகாக மாறிவிடும் என்று கூறுவார்கள். அப்படி பொன்னியின் செல்வன் நாவலில் பேரழகானவராக அறியப்படும் கதாபாத்திரங்கள் நந்தினி மற்றும் குந்தவை. அறிவும் அழகும் மட்டுமல்ல சோழ நாட்டில் அன்பும் கொஞ்சம் அதிகமாகக் கொண்டிருக்கும் இளவரசி குந்தவை.
ஒருபுறம், வயது முதிர்வில் இருக்கும் சுந்தர சோழருக்கு உதவியாக இருப்பது. அண்ணன் தம்பி இருவரையும் அன்பாகப் பார்த்துக் கொள்வது. அவர்களுக்கு அறிவுரை வழங்குவது என ஒரு தாயைப் போல அவர்களை வழிநடத்துவார். ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மர் தஞ்சை பெருவுடையார் கோவிலைக் கட்டுவதற்கு குந்தவை பெரும் உதவியாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
மற்றொருபுறம், சோழ அரசின் நிர்வாக முடிவுகளில் சரியான ஆலோசனைகள் வழங்குதல். நந்தினியின் நயவஞ்சகமான சூழ்ச்சிகளை அறிந்து கொள்ளுதல். இப்படி குடும்பம் மற்றும் அரச காரியங்கள் என அனைத்திலும் ஒரு கண் வைத்துக் கவனித்து காத்துவரும் திறமைமிக்க இளவரசியாக குந்தவை இருந்தார்.
இவ்வாறு குடும்பத்தையும் அரசையும் திறமையுடன் கவனித்து வரும் இளவரசி காதல் செய்யாமல் இருப்பார் என்று நம்பிவிட வேண்டாம். குந்தவை காதலிலும் திறமை மிகுந்தவராகத்தான் இருந்தார். வந்தியத் தேவனைப் பார்த்தது முதலே அவனை நன்கு அறிந்து கொண்டு அன்புச் சேட்டைகள் மூலம் அவனைக் காதலிக்க ஆரம்பித்து விடுவார். (வந்தியத் தேவனாக – கார்த்தி, குந்தவை- திரிஷா).
சோழப் பேரரசின் மீதும் அதீத அன்பு கொண்ட இளவரசி குந்தவை. சோழ நாட்டிற்குப் பல நன்கொடைகளை வழங்கி பல கோயில்கள் கட்டுவதற்குக் காரணமாக இருந்தார். மேலும் கோயில்கள் கட்ட பல செலவுகள் பலரும் செய்து வந்த வேளையில், மக்களுக்கான மருத்துவமனைகளை ஏற்படுத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
தனது வாழ்நாள் முழுவதும் தம்பி அருள்மொழி வர்மனையும், சோழப் பேரரசையும் அன்பாலும் திறமையாலும் கண் போலப் பார்த்துக்கொண்டவர் குந்தவை. கல்கி நாவலில் உள்ள எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் முக்கிய இடம் கொடுத்திருப்பார். அந்தவகையில் குந்தவை கதாபாத்திரம் நாவலில் சிறப்பாக அமைந்திருக்கும்.
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை த்ரிஷா குந்தவையாக நடித்துள்ளார். இளவரசி குந்தவகை பிராட்டியாரின் அழகு, அறிவு, அன்பு, திறமை, காதல் என அனைத்திற்கும் நடிகை த்ரிஷா பொருத்தமாக அமைந்திருக்கிறாரா?