கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக மாணவர்களுக்கு இலவச கணணி பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு நோயாளிகளுக்கு இலவச ஆயுர்வேத சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் புதன்கிழமை (15) இடம்பெற்ற மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்தார்.

தலைவர் உட்பட 15 உறுப்பினர்கள் கலந்து கொண்ட சபை அமர்வில் அவர் தொடர்ந்து பேசுகையில்,

கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. மாதக் கணக்கில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. எனினும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், ஒரு வருடம் பின்தங்கிய நிலையில் பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளன.

இப்போது, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து வசதி குறைந்துள்ள நிலையில் அடிக்கடி பாடசாலைகள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால், மாணவர்களின் கல்வி பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.
இந்த நிலையில் கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக மாணவர்களுக்கு இலவசமாக கணணி பயிற்சி நெறிகள் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிதேச பாடசாலைகள் அனைத்துக்கும் இது தொடர்பான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏராளமான தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் பயிற்சி நெறியில் இணைந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சியாக இருக்கின்றது. விடுமுறை காலத்தை மாணவர்கள் தகுந்த முறையில் பயன் படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. பெற்றோர் தமது பிள்ளைகளை பயிற்சி நெறிக்கு அனுப்பி வைப்பதோடு, பிரதேச சபை உறுப்பினர்கள் தத்தமது வட்டாரங்களில் உள்ள மாணவர்களை பொறுப்புடன் வழிநடத்த அக்கறை காட்ட வேண்டும்.

அதேபோல், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளர்கள் தகுந்த முறையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அத்தோடு மருந்துப் பொருட்களின் விலைகளும் பலமடங்கு அதிகரித்துள்ளன.

எனவே, பிரதேச சபையின் ஊடாக தேவையான மருந்துகளை வழங்கவும், நடமாடும் சேவைகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சகல வட்டாரங்களுக்கும் ஆயுர்வேத சிகிச்சை விஸ்தரிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வை நோயாளர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது உறுப்பினர்களின் கடமையாகும். அதற்குத் தேவையான உதவிகளை வழங்க பிரதேச சபை தயாராக உள்ளது.

மேலும், எமது பிரதேசத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதால், நகர மக்களோடு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களும் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்ற. அத்துடன், சமையல் எரிவாயு விநியோகத்தில் காணப்படும் பாகுபாடுகள் தொடர்பாக உறுப்பினர்கள் சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்கள். இந்த விடயத்தை அரசாங்க அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்து குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.