கொவிட் சூழலை விட தற்போது கல்வித்துறைக்கு பெரும் சவால்

0
358

கல்வித்துறையானது கொவிட் சூழலைவிட மோசமான சவாலை பொருளாதார நெருக்கடியில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது – கோபா குழுவிடம் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த கல்வித்துறையும் தீவிரமான மற்றும் சிக்கலான செயன்முறையைக் கடக்க வேண்டியுள்ளது. கொவிட் சூழ்நிலையைவிட பொருளாதார நெருக்கடியினால் தோன்றியுள்ள நிலையை முகாமைத்துவம் செய்வது சிக்கலாகியுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரத்னசிங்ஹ, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் தற்போதைய கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் கல்வித் துறையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் கூடியபோதே கல்வி அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

ஷகுறிக்கப்பட்ட நாட்கள் பாடசாலைகளை நடத்த முடியாமல்போனமையால் வரையறுக்கப்பட்ட காலத்தில் பாடத்திட்டத்தைப் பூர்த்திசெய்ய முடியாமை, தற்பொழுது நிலவும் எரிபொருள் பற்றாக்குறை, பிள்ளைகளின் குடும்பங்களில் காணப்படும் பொருளாதார நெருக்கடி, பெற்றோர் வேலைகளை இழக்கும் நிலை போன்ற மோசமான சூழ்நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கிராமங்களில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும், ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக கற்பிப்பது மாணவர்களுக்கு வெற்றிகரமான முறையாக இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என்பது மற்றுமொரு பிரச்சினை என்றும், அரசாங்க ஆதாரங்களுக்கு அப்பாற்பட்ட ஏனைய நிறுவனங்களிடமிருந்து பெறப்படவுள்ள யுனிசெப், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற திட்டங்களின் நிதியை மறுசீரமைக்க முன்னுரிமைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட காலப் பகுதிக்கு மாத்திரம் பாடசாலைகள் நடத்தப்படுவதால் முழுமையான பாடநெறிகளைப் பூர்த்திசெய்ய முடியாமை பரீட்சையுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால் பாடத்திட்டத்தின் எல்லையைக் குறைப்பதற்கான அவசியம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இல்லாவிட்டால் மாணவர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்களும் கடுமையான அழுத்தங்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here