தேர்தல் தொடர்பில் சுயாதீன வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் வழங்கியுள்ள நேர்காணலில் கூறியுள்ளது என்ன?

0
118

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று இரண்டு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு வொன்று நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில், அந்த நிதியத்துடனான வேலைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா என்ற உறுதியான முடிவை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்தது. அந்த வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொண்டுள்ள வேலைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதா – இல்லையா? அவ்வாறில்லாவிட்டால் மீண்டும் இருளான யுகத்திற்குச் செல்வதா? என்பதற்கான பதிலை இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளே வழங்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

“பெற்றுக் கொண்டுள்ள வெற்றியை தொடர்ந்து பலமாக முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத் திட்டங்களை நாம் ‘இயலும் ஸ்ரீலங்கா’ மூலம் முன் வைத்துள்ளோம். அவ்வாறான திட்டங்கள் எம்மால் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வருமானத்தை அதிகரிப்பது, பொருளாதாரத்தை முன்னேற்றுவது, மக்களுக்கு நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

ஏனைய பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு இணங்க திருடர்களை கண்டுபிடிப்பதற்கான வேலைத்திட்டங்களும் எமது வேலைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்டக் கட்டமைப்பு இன்றி உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியாது. அதற்கான சட்டங்களை நாம் நிறைவேற்றவுள்ளோம்.

அது தொடர்பான 400 கோப்புகள் என் வசம் உள்ளன. அதில் 15 கோவைகள் தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேவேளை நாட்டில் தற்போது இனவாதம், மதவாதம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கிடையாது. அதேபோன்று எதிர்க்கட்சிகள் தெரிவிப்பது போன்று 13ஆவது அரசியலமைப்பு திருத்த விவகாரம் பாரிய பிரச்சினை கிடையாது.அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற பிரச்சினையே காணப்படுகின்றது. அதற்கிணங்க எனது நிலைப்பாட்டை நான் முன்வைத்துள்ளேன். முதலில் மக்களை வாழவைப்பதற்கான பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறும் நிலையில் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களுக்கு விசேட நேர்காணல் ஒன்றை வழங்கினார்.

ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற மேற்படி நேர்காணல் நிகழ்வில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி பதிலளித்தார்.

இதன்போது ஜனாதிபதியிடம் எழுப்பபட்ட கேள்விகள் அதற்கான பதில்களையும் பார்க்கலாம்.

கேள்வி: இம்முறை ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடைகளில் முக்கியமான விடயங்கள் பல முன்வைக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: ஒரு தரப்பு தொடர்பான 400 கோப்புகள் என்னிடம் உள்ளன. அதில் இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பான விபரங்கள் உள்ளடங்குகின்றன. சிலர் ஜனநாயகம் தொடர்பில் பேசுகின்றனர்.இனவாதம், மதவாதம் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பிலும் பேசுகின்றனர்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும் பேசுகின்றனர் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றியே நாம் சிந்திக்க வேண்டும். அது பற்றியே பேச வேண்டும். என்னிடம் உள்ள 400 கோவைகளில் 15 கோவைகள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எமது நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. இனவாதம், மதவாதம் மற்றும் வேறு எந்தப் பிரச்சினையும் கிடையாது. 13-வது திருத்தம் தொடர்பில் பாரிய பிரச்சினையை கிளப்பினாலும் அவ்வாறான எதுவும் கிடையாது.

கேள்வி: இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையில், அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவருக்கும் ஆதரவு வழங்குவதாக இதுவரை தெரிவிக்கவில்லை. அந்தக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் உள்ளடங்குகின்றன.

சுமந்திரன் எம்பி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி ஏனையவர்களின் ஆதரவு எனக்குள்ளது என்பதை தெரிவிக்க முடியும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் இந்த விடயத்துடன் தொடர்புபட்டதல்ல. இந்த விடயம் பொருளாதார பிரச்சினையுடன் தொடர்புடையது என்பதை குறிப்பிட வேண்டும்.

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் எனக்கே ஆதரவு வழங்குகின்றனர். அதனால் எனக்கு எதுவித பிரச்சினையும் கிடையாது. எவர் எதைக் கூறினாலும் இம்முறை தேர்தலில் வெற்றி பெறுவது நானே.

கேள்வி: அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதா? அது தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா?

பதில்: சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை உள்ளடக்கியதாகவே அந்த வரவு செலவுத் திட்ட யோசனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்கு இணங்க நாம் வரவு செலவுத் திட்டத்தை தயாரித்தால் அடுத்த வருடத்தின் வருமானம் மற்றும் செலவுக்கிடையில் 1000 பில்லியன் ரூபா நிலுவை ஏற்படும். அதனை நிவர்த்தி செய்வதற்கு எம்மால் சர்வதேச நிதி சந்தையில் கடன் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டிற்கு அமைய தேசிய உற்பத்தியில் 5 வீதத்திற்கும் அதிகமான கடன் ஒத்துழைப்புகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

எனினும் திசைகாட்டியில் யோசனைகளை நடைமுறைப்படுத்தினால் நிலைமை சிக்கலாகும்.

தேசிய மக்கள் சக்தியினரின் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் அவர்களுடன் விவாதமொன்றை மேற்கொள்ள நான் தயாராகவே உள்ளேன்.

அவர்கள் அது தொடர்பில் மக்கள் முன்னிலையில் தெரிவித்தாலும், அதற்கான நேரத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதைக் குறிப்பிட வேண்டும். அவர்களின் திட்டங்கள் வறுமை நிலை மக்களே அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளன. எனினும் நமது நாடு நடுத்தர நாடாகும்.

கேள்வி; திசைகாட்டியின் மேற்படி யோசனைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பில் தெரிவிக்க முடியுமா?

பதில்: திசைகாட்டியின் வரவு செலவுத்திட்ட யோசனையின்படி அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவுக்கிடையில் பெரும் இடைவெளி உருவாகும். அது நாலாயிரம் பில்லியன் ரூபாவாகும்.

எமது தேசிய உற்பத்தி வருமானத்தை நோக்கும் போது அது 11.2 வீதத்துக்கு அதிகமாகும். அவ்வாறு ஏற்படும் நிலுவையை நிவர்த்தி செய்வதற்கு சர்வதேச நிதி சந்தைகளில் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாது போகும்.

அப்போது சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் இரத்தாகும்.

அவ்வாறானால் சர்வதேச நிதி சந்தையில் வட்டி வீதம் 25 வீதமாக அதிகரிக்கும். டொலரின் பெருமதி 500 ரூபாவாக அதிகரிக்கும் இது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

கேள்வி: அது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது?

பதில்: இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரும் இதுவரை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அந்த நிதியத்தின் பேச்சாளரான ஜூலி கொசெக் அது தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள முன்னேற்றத்தை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி: தமது அரசாங்கத்தில் வற் வரியை முற்றாக இல்லாதொழிப்பதாக ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்து வருகின்றார். அவரது அந்த தீர்மானம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களுக்கு முரணாக அமையுமா?

பதில்: முரண்பாடாகவே அமையும். அரசாங்கத்திற்கான வருமானத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் மீண்டும் 2022 மே மாத நெருக்கடியையே எதிர்கொள்ள நேரும்.

அவ்வாறென்றால் நாட்டு மக்கள் இப்போதே எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளவேண்டும்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத் தேர்தலா அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலா? எதனை நடத்துவதற்கு தீர்மானம் உள்ளது?

பதில்: பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருவதால் முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியும். அதன் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியும்.

கேள்வி: நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறாகக் காணப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த முடியுமா?

பதில்: இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்துக் கொண்டுள்ளது. என்ன நடக்கும் என்பது தொடர்பில் அவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

அண்மைய பங்களாதேஷ் நெருக்கடியின் பின்னர் நாமும் இலங்கையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.

கேள்வி: நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகள் தமது கொள்கைப் பிரகடனங்களில் குறிப்பிட்டுள்ள நிலையில் உங்களது கொள்கை பிரகடனத்தில் அது தொடர்பில் குறிப்பிடப்படவில்லையே?

பதில்: நாட்டில் தற்போதுள்ள முக்கியமான பிரச்சினை நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதல்ல.

அது தொடர்பில் பேசிப்பேசி அவர்கள் தற்போது நாட்டின் பொருளாதார நிலையை மறந்துவிடுகின்றனர். நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பன நாட்டின் தற்போதைய உண்மையான பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக இழுத்தடிப்புச் செய்யும் செயல்களே. ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த பின்னர் அது தொடர்பில் எவரும் பேசுவதில்லை என்பதே முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன என்னிடம் கூறிய விடயம்.

கேள்வி: தமது ஆட்சியில் இந்திய அதானி நிறுவனத்தின் மின் உற்பத்திக்கான உடன்படிக்கையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜே.வி.பியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.அது தொடர்பில் உங்கள் கருத்தை தெரிவிக்க முடியுமா?

பதில்: அவ்வாறு தன்னிச்சையாக இரத்துச் செய்ய முடியாது. அது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். அவ்வாறு அது இரத்துச் செய்யப்பட்டால் இந்தியாவுடனான வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும்.

அந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் காணப்படுமானால் அதனை நிவர்த்தி செய்ய முடியும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தமது ஆட்சிக் காலத்தில் ஜப்பான், சீனா, இந்தியா போன்ற நாடுகளின் இவ்வாறான பல திட்டங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததால் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேர்ந்தது. நல்லவேளை, ஜேவிபி ஆட்சிக்கு வரப் போவதில்லை.

கேள்வி: எதிர்காலத்தில் சர்வதேச நாடுகளுடன் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டம் உண்டா?

பதில்: எதிர்காலத்தில் இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். ஆனால் அமெரிக்காவுடனான வர்த்தக உடன்படிக்கையை உடனடியாக மேற்கொள்ளும் திட்டம் கிடையாது.

கேள்வி: இலங்கையின் கடல் எல்லையை வைத்து இந்தியா – சீனாவுக்கிடையே மோதல்கள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறானால் இலங்கையின் செயற்பாடுகள் எவ்விதமாக அமையும்?

பதில்: அவ்வாறு சீனா மற்றும் இந்தியாவுக்கிடையிலா மோதல்கள் இடம்பெற வாய்ப்பில்லை. எமது கடல் எல்லையை நாம் பாதுகாத்துக் கொள்வோம். எமது கடல் எல்லையை அடிப்படையாகக் கொண்டு அதிகார போட்டி காணப்படுகின்றதே தவிர மோதல்களுக்கு இடம் கிடையாது. எமது வளங்கள், உரிமைகளைப் பாதுகாத்து ஏனைய நாடுகளுக்கு பாதிப்பில்லாதவாறு உரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.

THank you – Thinakaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here