சமீப காலமாக புகையிரத கடவைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம் , அந்த வகையில் நானுஓயாவை அண்மித்த பகுதிகளில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் தினமும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுவதாகவும் இதில் நானுஓயா பிரதான நகருக்கு செல்லும் முக்கியமான வீதிகளாகவும் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொது மக்கள் பயணிக்கின்ற வீதிகளாகவும் காணப்படுகின்றன.

அண்மைய நாட்களில் அந்தக் கடவையில் விபத்து சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததுடன் அண்மையில் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் புகையிரத கடவைப் பாதுகாவலர் இல்லாத காரணத்தினாலும் , புகையிரத கடவை தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகையை எதுவும் காட்சிப்படுத்த வில்லை எனவும் இதன் காரணமாக பல விபத்துக்கள் ஏற்பட்டு மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இப்பகுதிகளில் பாரிய விபத்தோ அல்லது மக்களின் பல உயிர்களையோ பலி எடுப்பதற்கு முன் உரிய அதிகாரிகள் விரைவில் கவனம் செலுத்தி பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கு காவலர்களை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.