ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகொட பகுதியில் இரு சிறார்கள் நேற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில், இன்று காலை ஒருவரும், முற்பகல் இன்னுமொருவம் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நீர் வடிந்தோடும் வடிகானில் 8 வயது சிறுமியும், 10 வயதுடைய சிறுவனும் (அண்ணன், தங்கை) அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். கடும் மழையால், போகொட கொட்டியாமலுவ பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வடிகானுக்கு அப்பால் உள்ள வீட்டுக்கு தனது தாய் சென்றுள்ளதாகவும் தாயை அழைத்து வருவதற்காக சென்ற இரண்டு சிறுவர்களும் நீர் வடிகான் ஒன்றை கடப்பதற்கு முற்பட்ட வேளை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த இரண்டு சிறுவர்களும் போகொட வித்தியாலயத்தில் தரம் ஐந்து மற்றும் தரம் இரண்டில் கல்வி கற்கும் சகோதரர்கள் ஆவர். வடிகானில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் செருப்பும், சாரமும் , சிறிய கூடை பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஹாலிஎல பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து சிறுவர்களை தேடும் பணிகளில் மிகவும் சிரமத்தின் மத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுவர்களின் தந்தை கொழும்பில் தொழில் புரிந்து வருவதுடன் குறித்த சிறுவர்கள் இருவரும் தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.