சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் ஜுன் மாதம் (12) ஆம் திகதி சகல ஆசிரியர்கள் அதிபர்களும் போராட தயாராக வேண்டும் என ஒன்றினைந்த அதிபர் ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை (10) நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
இதன் போது சில கருத்துக்களை முன்வைத்தனர் – தற்போதைய அரசாங்கத்திற்கு எமது பலத்தை காட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் , அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவை தீர்க்கப்படாமல் உள்ளதால் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
சம்பள நிலுவை தொடர்பில் அரசாங்கத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்திய போதும் இதுவரை தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவில்லை.
கடந்த வருடங்கள் ஆசிரியர்களின் சம்பள நிலுவை கோரி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் பாரியபோராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சில கோரிக்கைகளை மட்டும் அரசாங்கம் நிறைவேற்றியது. ஆனால், அதிபர் ஆசிரியர்களின் ஏனைய நிலுவைகள் மற்றும் நிர்வாகப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளமையால் அவற்றை தீர்க்கும் முகமாக அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதற்காக போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளோம்.
நாங்கள் கேட்பது சம்பள அதிகரிப்பு அல்ல சம்பள முரண்பாடு எமது நாட்டில் சுமார் 27 வருடங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தான் எமது ஆசிரியர்கள், அதிபர்களை இவ்விடயத்தில் ஏமாற்றி வந்துள்ளது இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து நாங்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்து கூற வேண்டும் அவ்வாறு இல்லாவிடின் அடுத்து வரும் மாதங்களில் நாடு பூராகவும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்து அரசாங்கத்திற்கு பாடம் புகட்டப்படும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். எனத் தெரிவித்தனர் அத்துடன் அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை கோரி நாளைய தினம் (12) நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்னால் இடம் பெறும் பாரிய போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.
நானுஓயா நிருபர்