நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் பரிசோதனை நுவரெலியாவிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (02) பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்புறங்களில் உள்ள இடங்கள் , வர்த்தக நிலையங்கள் மற்றும் பிரதானமாக நுவரெலியாவில் உள்ள 26 பாடசாலைகளில் 500 மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தீவிரமாக இவ் விசேட போதைப் பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் எட்டு குழுக்கள் அடங்கிய பொலிஸ் அதிகாரிகள் இணைந்து விசேட மோப்ப நாய் சகிதம் இந்த சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் மாணவர்களுக்கிடையே போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளமையினால் அதனை தடுப்பதற்காக நுவரெலியாவில் பாடசாலை ஆரம்பித்தவுடன் பாடசாலை மாணவர்களையும் சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் தொடர்ந்து மாணவர்கள் பெற்றோர்கள் போதை பொருள் வியாபாரிகள், மற்றும் பாவிப்பவர்கள் தொடர்பாக தகவல் அறிந்திருந்தால் உடனடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறியதருமாறும் போதை பொருள் வியாபரிகள் தொடர்பாக விழிப்பாகவும் இருக்குமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

நானுஓயா நிருபர்