பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை உருவாக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், அரச மற்றும் தனியார் துறைகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய சட்டமூலத்தின் ஊடாக தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக் குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும். இலங்கையின் முதலாவது அரச சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2 வீதமாக இருந்ததாகவும், சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு 91 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.3 வீதம் மட்டுமே எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்டங்களில் பணியாற்றும் பெரும்பாலானவர்கள் பெண்கள். ஆனால் பணிப்பாளர் சபையில் ஒரு பெண்ணாவது இருக்கிறார்களா என்று பாருங்கள். ஆடை தொழில்துறையில் பெரும்பாலானவர்கள் பெண்கள் இருக்கின்றனர்.

ஆனால் நிறைவேற்று அதிகாரத்தில் ஒரு பெண் இருக்கிறாரா? இவ்வாறு பெண்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. குறிப்பாக பணிப்பாளர் சபைகளில் பெண்களுக்கு பொறுப்புக்கள் வழங்க வேண்டும். அத்துடன் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது. இந்த தவறை, தனியார்துறை மட்டுமல்ல அரசாங்கமும் செய்துள்ளது.

எமது கூட்டுத்தாபனங்களிலும் பெண் பிரதிநிதித்துவம் இல்லை. இதற்காக சட்டமொன்றை இயற்றினால், சட்டத்தின் மூலம் இதனை சரிசெய்ய முடியும். இதுபோன்று பாரிய குறைபாடுகள் உள்ளன. இவற்றைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். கல்வித்துறையில் அநேகமான பெண்கள் இருக்கின்றனர். ஆசிரியர், அதிபர்களாக பெண்களே அதிகமாக இருக்கின்றனர். சுகாதாரத் துறையிலும் பெண்கள் இருக்கின்றனர். நிர்வாகத்துறையிலும் பெண்கள் இருக்கின்றனர். தனியார் துறையில் இந்த வளர்ச்சி ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

PMD media