அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா வரும் 22 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

முன்னதாக, அயோத்தி இராமர் கோயிலில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16ஆம் திகதி தொடங்கின. அன்று பிராயச்சித்தா உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள 22 ஆம் திகதி வரை இந்த சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். இந்த பூஜையில் 11 புரோகிதர்கள் ஈடுபட்டுள்ளதாக இராமர் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் கூறினார். தீர்த்த பூஜை, ஜல யாத்திரை, கங்காதிவஸ் போன்ற பூஜைகள் இனி வரும் நாட்கள் நடைபெற உள்ளன.

எதிர்வரும் 22 ஆம் திகதி பகல் 12.20 மணியளவில் இராமர் கோயில் திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜை பகல் 1.00 மணியளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இராமர் கோயில் திறப்பு விழா கொண்டாட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் நேரடியாக பங்கேற்கவும், தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை காண ஏதுவாகவும் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களுக்கு 22ஆம் திகதி அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருங்கல்லில் செதுக்கப்பட்ட 200 கிலோ எடையுள்ள குழந்தை இராமர் சிலை, ஆகம விதிமுறைப்படி இராமர் கோயிலுக்குள்   (17) இரவு கொண்டுவரப்பட்டு, கோயில் கருவறையில் நேற்று (18) மாலை நிறுவப்பட்டது. இந்த சிலையை மைசூர் சிற்பி அருண் யோகிராஜ் வடித்துள்ளார். கருவறைக்குள் நிறுவப்பட்ட குழந்தை இராமர் சிலைக்கு கணேச – அம்பிகா பூஜை, வருண பூஜை போன்ற பூஜைகள் 4 மணி நேரம் நடைபெற்றன. இந்த சிலையின் கண்கள், துணியால் மூடப்பட்டுள்ளது. திறப்பு விழா நாளில் இந்த துணி அகற்றப்பட்டு, பிரதிஷ்டை பூஜைகள் நடைபெறும்.