நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விவகாரத்தில் காட்டுப்பட்டுள்ள பாரபட்சத்தை கவனத்தில் எடுத்து நுவரெலிய மாவட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க இலங்கையின் புதிய பிரதமர் என்றவகையிலும்  உள்நாட்டு அலுவல்கள் பொது நிர்வாக அமைச்சர் என்றவகையிலும்  முன்வாருங்கள் எனும் கோரிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்தன விடம் முன்வைத்ததாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

 

புதிய பிரதமராகவும்  பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தன, பொது நிர்வாக அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு   (25/7) கொழும்பு 7 மொதுநிர்வாக அமைச்சிலே இடம்பெற்றது.

இதன்போது புதிய பிரதமரைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்த துடன்  நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக விடயத்தில் காட்டப்பட்டுள்ள பாரபட்சம் குறித்த கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் தாம் கையளித்ததாக எம். திலகராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பிரதேச செயலக அதிகரிப்பு விவகாரத்தில் நுவரெலிய மாவட்ட மக்களுக்குக் காட்டப்பட்டுள்ள பாரபட்சம் தொடர்பில் கடந்த 2021 ஆண்டு நவம்பர் மாதம் முதல் மலையக அரசியல் அரங்கம் கையெழுத்து இயக்கத்தையும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது. இது குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிலும்  முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளது. அதே நேரம் துறைசார்ந்த அமைச்சருக்கும் எழுத்து மூலமாக அறிவித்திருந்தது.

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலாவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக மேற்படி விடயங்களின் முன்னெடுப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் புதிய ஜனாதிபதி , புதிய பிரதமர், அமைச்சரவை என மாற்றங்களுடன் மீண்டும் நாட்டின் நிர்வாகப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தினேஷ் குணவர்தனவைச்   சந்தித்து மேற்படி விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக அரசியல் அரங்கத்தின் சார்பாக கோரிக்கை மனுவை கையளித்தோம்.

இதற்கு முன்னரும் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன வைச் சந்தித்துப் பேசியிருந்த போதும் தற்போது அவர் பிரதமராகவும் தெரிவ செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக அதிகாரங்களுடன் இந்த விடயத்தில் கவனம் செலுத்த முடியும் என்ற அடிப்படையில் எழுத்து மூலமாகவும் எமது கோரிக்கையை முன்வைத்தோம்   எனவும் தெரிவித்தார்.