மன்னார் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் எலி மொய்த்த உணவுகளை களஞ்சியப்படுத்தியும் விற்பனைக்காகவும் வைத்திருந்த குறித்த உணவகத்துக்கு எதிராகவும் உணவக உரிமையாளருக்கு 70,000 ரூபா தண்டப் பணம் செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் ஒவ்வொரு குற்றத்துக்காகவும் 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சிரித்துள்ளதுடன் 29.03.2023 வரை வியாபாரத்தை தடை செய்து நீதவான் நீதி மன்றத்தினால் உத்திரவிடப்பட்டுள்ளது.
குறித்த கடைக்கு எதிராக நேற்று புதன்கிழமை மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மன்னார் நகரில் உள்ள குறித்த உணவகத்தில் தொடர்ச்சியாக சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகள் களஞ்சியப்படுத்தியும் , விற்பனைக்காக வைத்திருப்பது தொடர்பாகவும் உணவகத்தில் பிரைட்றைஸ் தயாரிப்புக்கான பணியின் போது எலி பாய்ந்து செல்லும் காணொளி வெளியாகியிருந்தன.
அதற்கமைவாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரிக்கு விடுக்கப்பட்ட பணிப்புரையின் பேரில் குறித்த உணவகம் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் போது சுகாதாரமற்ற முறையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகளை களஞ்சியப்படுத்தியும் விற்பனைக்காக வைத்திருந்தமையும் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உணவகத்துக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமைக்கு அமைவாக குறித்த மேலும் கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களை அழிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.