செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் இது நாட்டின் வரலாற்றில் ஒதுக்கப்பட்ட கூடுதல் தொகை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதில் விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சித் துறையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், நாட்டில் டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குத் தேவையான நிறுவன கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
விஞ்ஞான துறையினூடாக இலங்கைக்கு அளப்பரிய சேவையாற்றிய பேராசிரியர் ஸ்டென்லி விஜேசுந்தரவின் நினைவு தின விழாவை முன்னிட்டு இன்று (10) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், சிறந்த அறிஞரான ஸ்டென்லி விஜேசுந்தரவின் கொலையுடன் இந்த நாட்டில் உயர்கல்வி மற்றும் விஞ்ஞானத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கக்கூடிய மனித வளத்தை நாடு இழந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இதனுடன் இணைந்ததாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஸ்டென்லி விஜேசுந்தர AI மையத்தை (AI Corner) திறந்து வைக்கும் நிகழ்வும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு வைக்கப்பட்டுள்ள ஸ்டென்லி விஜேசுந்தரவின் உருவச்சிலையை ஜனாதிபதி திறந்து வைத்ததுடன், பேராசிரியர் ஸ்டென்லி விஜேசுந்தரவின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் கடித உரை என்பவற்றையும் ஜனாதிபதி வெளியிட்டார்.

“உயர்கல்வியும் அபிவிருத்தியின் பங்கும்” என்ற தலைப்பில் பேராசிரியர் மொஹான் முனசிங்க விசேட உரையாற்றினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:
ஸ்டென்லி விஜேசுந்தரை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். அவர் திருமதி அனோஜா விஜேவர்தனவை மணந்தார். வால்டர் விஜேவர்தன அவர்களின் குடும்பத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது.
மேலும், 1968 ஆம் ஆண்டு நான் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இணைந்த போது ஸ்டென்லி விஜேவர்தன கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் சட்டத்துறையில் படித்தேன், அவர் அறிவியல் துறையில் பணிபுரிந்தார்.

அதன் பிறகு அவரை அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக 1977ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனவின் தலைமையில் உருவான அரசாங்கத்தில் ஸ்டென்லி விஜேசுந்தர, சித்தன்லி கல்பகே ஆகியோருடன் நெருக்கமாகப் பணியாற்றினார். புதிய பல்கலைக் கழக சட்டமூலமொன்றை நாங்கள் அனைவரும் இணைந்து உருவாக்கினோம்.

இதேவேளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக ஸ்டென்லி விஜேசுந்தரவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. அப்போது உயர்கல்வி அமைச்சராக இருந்த அமைச்சர் நிஷங்க விஜேரத்ன இதற்கு உடன்பாடு தெரிவித்தார். அதன் பின்னர் ஸ்டென்லி விஜேசுந்தர கொழும்பு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக பாரிய பணிகளை ஆற்றினார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பெரும் முன்னேற்றத்தைக் காண நான் விரும்பினேன். எப்படியோ அந்த டசெயற்பாடுகளை ஸ்டென்லி விஜேசுந்தர முன்னெடுத்தார். குறிப்பாக விஞ்ஞானப் பிரிவின் முன்னேற்றத்திற்காக கலாநிதி சமரநாயக்கவுடன் இணைந்து பல பணிகளைச் செய்ததோடு கணினி நிலையமும் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், அறிவியல் மற்றும் விவசாயத் துறையில் வெலட மிகுந்த ஆர்வம் காட்டினார்.

உபாலி விஜேவர்தனவின் மரணத்தின் பின்னர் களனி ரஜமஹா விகாரையின் நிலமேயாக ஸ்டென்லி விஜேசுந்தர நியமிக்கப்பட்டார். நான் சபையின் உறுப்பினராகப் பணியாற்றினேன்.

ஸ்டென்லி விஜேசுந்தர மாத்திரமன்றி கல்வித்துறைக்கு பெரும் சேவையாற்றிய அறிவாற்றல் கொண்ட பல பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் இக்காலத்தில் கொல்லப்பட்டனர். ஸ்டென்லி விஜேசுந்தர கொழும்பு பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்ததுடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு பெரும் சேவையாற்றிய உபவேந்தர் படுவத்த விதானவும் கொல்லப்பட்டார். பேராதனை பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இடதுசாரி அமைப்புகளில் பணியாற்றிய தயா பத்திரன என்ற மாணவர் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதும் இது தொடர்பான பின்னணியை உருவாக்கியது. இந்த காலகட்டத்தில் பல மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளை போலீசார் செய்யவில்லை.

இன்று போல் ஆர்ப்பாட்டங்கள், சட்ட மீறல்கள் நடக்கும் போது மட்டுமே பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்தனர். அவர்கள் வேறு எதுவும் செய்யவில்லை. இந்தக் கொலைகள் பொலிஸானரால் செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பல ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், கொலன்னாவை சத்தாதிஸ்ஸ தேரர் போன்ற பல பிக்குகள் கொல்லப்பட்டனர். மாணவர் தயா பத்திரன கொல்லப்பட்ட போது ஸ்டென்லி விஜேசுந்தர கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். மாணவர்களை அங்கு அழைத்துச் சென்று விசாரிக்க பொலிஸார் விரும்பினர். ஆனால் அவர் அதற்கு அனுமதிக்கவில்லை. அவர் என்னுடனும் பேசினார். இது மாணவர்கள் தொடர்பான விடயம். இதில் கைவைத்தால் பிரச்சினை வரும் என்றேன்.

ஸ்டென்லி விஜேசுந்தரவின் கொலையின் மூலம் இந்த நாட்டில் உயர்கல்விக்கும் விஞ்ஞானத்துறைக்கும் துணைபுரியும் நல்ல அறிவுள்ள மனித வளத்தை நாடு இழந்தது. அவருடைய நூறாவது நினைவு தினத்தில் இன்று நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம். முன்னதாக, அவரது நற்பண்புகளைப் போற்றும் வகையில் பல விழாக்கள் நடத்தப்பட்டன. ஆனால் இன்று வித்தியாசமாக நினைவு கூறப்படுகிறது. இன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மையம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய உலகம் செயற்கை நுண்ணறிவுடன் முன்னேறி வருகிறது. சில மாதங்களுக்கு முன், செயற்கை நுண்ணறிவை முன்வைத்த முக்கிய நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு இடையே பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஏனெனில் இது வரம்பு இல்லாமல் பயன்படுத்தப்படுவதில் சிக்கல் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு முக்கிய நாடுகளின் தலைவர்களை அழைத்து நடத்திய கூட்டத்தில் இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உடன்பாடு காணப்பட்டுள்ளது. மேலும், அதற்கான முதல் சட்டத்தை ஐரோப்பிய யூனியன் முன்மொழிவதாக செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. இந்த தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டு கையாள வேண்டும்.

அதன்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து துறைசார் குழுவினருடன் கலந்துரையாடியிருந்தேன். இலங்கையில் முதன்முறையாக AI தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணியை ஆரம்பித்துள்ளோம்.
மேலும், விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேலும் 08 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தளவு நிதி ஒதுக்கப்பட்டதில்லை. நாம் முன்னேற வேண்டுமானால், அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

காலநிலை மாற்றம் மற்றும் பசுமை ஆற்றல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியுள்ளோம். அதன்படி, இரண்டு பாரிய முதலீடுகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சூரிய சக்தி, அனல் மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் முன்னேறும் திறன் நம்மிடம் உள்ளது. ஆனால், நிலக்கரியை கொண்டு வரவும் அனல் மின் நிலையங்களை நிர்மாணிக்கவும் இன்றும் பலர் பழகியுள்ளனர்.. இதை நிறுத்துவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஏனென்றால் சூரிய சக்தி, காற்றாலை மின்சாரத்தில் லஞ்சம் பெற முடியாது. ஆனால் இந்த பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு தடைகள் ஏற்படலாம்.

பசுமை பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். தென்னிந்தியாவின் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் பெங்களூர் என்பன பெரிய டிஜிட்டல் பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன. அதை நம் நாட்டிற்கு கொண்டு வருவது அவசியம், எனவே பல புதிய நிறுவனங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம்.

முதலாவதாக, இந்த அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட 08 பில்லியன் தொகையை செலவழிக்க தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கவுன்சில்( Technology and Innovation Council )என்ற பெயரில் ஒரு நிறுவனம் நிறுவப்படும். தொழில் நுட்பத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஒதுக்கப்பட்ட 08 பில்லியன் ரூபாவை ஒவ்வொரு துறையினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்கு அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம், டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்துச் செல்ல டிஜிட்டல் முகவர்நிலையத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக, AI மையம் உருவாக்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் தேவையான சட்டங்களை நிறைவேற்றிய பிறகு, புதிய அறிவியல் பொருளாதாரத்தையும் பசுமைப் பொருளாதாரத்தையும் உருவாக்க தேவையான நிறுவன ரீதியான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான கலாநிதி பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, அனுபா பாஸ்குவல், ஐக்கிய தேசியக் கட்சியின் தவசாளர் வஜிர அபேவர்தன, பாராமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், ராஜித சேனாரத்ன, யதாமினி குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட, கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜெயவர்தன, தபால் மாஅதிபர் ஆர். சத்குமார, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோரும் ஷாலித விஜேசுந்தர, டொக்டர் ரொஹான் விஜேசுந்தர, ருச்சினி விஜேசுந்தர, தனு விஜேசுந்தர உள்ளிட்ட ஸ்டென்லி விஜேசுந்தரவின் குடும்ப உறவினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
10-12-2023