பொருளாதார கொள்கை மாற்றி அமைக்கப்படும் போது மட்டுமே மக்களால் மீழ முடியும் – திலகர்

0
535

மல்லியப்பு திலகர் என்று அறியப்படும் மயில்வாகனம் திலகராஜ் இலங்கை நாடாளுமன்றத்தில் நுவரெலியா மாவட்ட உறுப்பினராக 2015 – 2020 வரை செயற்பட்டவர். இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள மலையகத்தில் பிறந்தவர், கொழும்பு பல்கலைக்கழத்தில் பொருளியல் துறையில் பட்டம் பெற்றவர். களச் செயற்பாட்டாராகச் செயற்படும் திலகராஜ் இலங்கை முழுவதிலும் இதற்கான பயணங்களைச் செய்து வருகிறார்.

ஈழக் கவிஞர் கருணாகரன் எடுத்துள்ள இந்த நேர்காணலில் திலகராஜ், இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளையும் அதற்கான தீர்வு யோசனைகளையும் குறித்து பேசுகிறார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் (ரணில் விக்கிரமசிங்க) பொறுப்பேற்ற பிறகும் பொருளாதார நெருக்கடி தொடர்கிறதே?
உருவாக்கப்பட்டிருப்பது புதிய அரசாங்கம் போன்றதொரு மாயையே தவிர புதிய அரசாங்கம் அல்ல. ஒரே ஒரு நபர் பிரதம ஆசனத்தில் மாறி இருக்கிறார். ஆனால், மாறவேண்டியவர் ஜனாதிபதி ஆசனத்தில் தொடர்ந்து இருக்கிறார். இது முறைமை மாற்றம் அல்ல ஆள் மாறாட்டம் மட்டுமே.

இதற்கு உரிய நடவடிக்கைகள் என்ன? மாற்று ஏற்பாடு குறித்து சிந்திக்கப்படுகிறதா?
சுதந்திரத்துக்குப் பின் இலங்கை நாடு மொழி – இன – மத வேறுபாடுகளினை முன்னிறுத்தியே நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது . 1948-ல் மலையகத் தமிழர் வாக்குரிமைப் பறிப்பு , 1956-ல் தமிழ் மொழி புறக்கணிப்பு – தனிச் சிங்களச் சட்டம், 1958, 1977, 1983 இனக்கலவரங்கள், 2010-ல் இலங்கைத் தமிழர்களுடனான உள்நாட்டு யுத்த முடிவுக்கு பின்னர் முஸ்லிம் விரோதப் போக்கு, 2019 ஈஸ்ட்டர் தின தாக்குதல் என ஒரு சில உதாரணங்களை எடுத்துப் பார்த்தால் இந்தப் பாரம்பரியம் புரியும். மாற்று ஏற்பாடு மனநிலை மாற்றத்துடன் வரவேண்டும். என்னைப் பொறுத்தவரைக்கும் சுதந்திரத்துக்குப் பின்னான எல்லா ஆட்சியாளர்களினதும் அடிப்படைச் சித்தாந்தமாக இனஒதுக்கல் இருந்து வந்துள்ளது. மாற்றாக முன்வந்தவர்களிலும் இந்தச் சித்தாந்தம் செல்வாக்குச் செலுத்தியமை துரதிர்ஷ்டவசமானது. பௌத்த மேலாதிக்கச் சிந்தனைக்கு வெளியே இவர்களால் சிந்திக்க முடியாது போனது. சில வேளை அநகாரிக்க தர்மபால (சிங்களத் தேசியவாதத்தின் தந்தை) இன்று உயிருடன் இருந்திருந்தால் கூட அவர் மாற்றி யோசித்திருக்கக் கூடும். ஆனால், அவரது சித்தாந்தத்தைப் பின் தொடர்ந்தவர்களால் அது முடியாமல் போயிற்று .

எனவே, மாற்று ஏற்பாடு என்பது முதலில் அந்த சித்தாந்தத்தினை குறுக்கு வெட்டாகப் பார்க்கக்கூடிய தரப்பில் இருந்து வருதல் வேண்டும். இப்போது ஆங்காங்கே ஒரு சில குரல்கள் கேட்கிறது. அதனையும் மீறி பழைய சித்தாந்தத்தை முன்கொண்டு வர முயற்சிப்பவர்களையும் காண்கிறோம்.

ரணில் அரசுக்கு ராஜபக்‌ஷக்களை விட அதிக ஆதரவு (உள்ளேயும் வெளியிலும்) கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதே?
இங்கே ரணில் அரசு என்ற ஒன்று இல்லை. ராஜபக்ஷ அரசுக்கு ரணில் பகுதி அளவில் தலைமை கொடுக்கிறார். உள்வீட்டுச் சண்டைக்கு பக்கத்து விட்டுக்காரர் சமாதானத்துக்கு வந்ததுபோல ஒரு சம்பவம்தான் இது. முதலாமவரைக் காப்பாற்ற இரண்டாமவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரண்டாமவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முதலாமவரின் அணியிடத்தில் தங்கி இருக்கிறார். அவர்களினால் எந்த நேரத்திலும் பாதிப்புகள் ஏற்படும் அபாயமே உள்ளது.

நெருக்கடியை – சவாலை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் எதையும் செய்வதைக் காணமுடியவில்லையே?
பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியால் உருவானது என்பதை பலரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். இப்போதும் கூட அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாதபோது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்பதே உண்மை. அரசியல் நெருக்கடிக்குத் தீர்வாக வந்த ரணிலை, “நீங்கள் பொருளாதார நெருக்கடியை மட்டும் கவனியுங்கள், அரசியலமைப்பு விஷயத்தில் எல்லாம் தலையிட வேண்டாம்” என ஆளும் மொட்டுக் கட்சியின் செயலாளர் கூறி இருக்கிறார். இவர்கள் அரசியலை வேறாகவும் பொருளாதாரத்தை வேறாகவும் பார்க்கிறார்கள். அல்லது அரசியலை பொருளாதார லாபம் ஈட்டுவதற்காக துறையாகக் கருதுகிறார்கள். உண்மையில் அதனால்தானே இன்றைய நெருக்கடி வந்திருக்கிறது. அரசியல் – சமூக – பொருளாதார துறைகளுக்கு இடையிலான பிணைப்பைப் புரிந்து கொள்ளாதவர்களால் இன்றைய நெருக்கடிக்கு தீர்வு காண்பது கடினம்.

முதலாளித்துவ அரசியலின் சிக்கலான கூறு இதுதானே. அவர்கள் பொருளாதாரத்தை முன்னரங்கில் வைத்து சமூகத்தையும் அரசியலையும் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள். இடதுசாரிகள் எப்போதுமே இந்த மூன்றையும் தொடர்புபடுத்தியே சிந்திப்பார்கள். செயல்படுவார்கள். எனவே, அவர்களால் இலகுவாக அரசியல் உரையாடல் செய்ய முடிகிறது. இன்றைய முதலாளித்துவ சிக்கல் நிலை யாரால் தோற்றுவிக்கப்பட்டதோ அவர்கள் தமது இலக்கினை அடையும் வரை நெருக்கடிக்கான தீர்வினை அனுமதிக்க மாட்டார்கள். இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்று அதுவும் புதிதான அரசியல் கலாச்சாரத்துடன் இணைந்ததாக அமையாத வரை நெருக்கடிக்கான தீர்வு தொலைதூரத்தில்தான்.

இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணலாம்?
இது குறித்து பல நூறு உரையாடல்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக சிங்கள செயற்பாட்டுத்தளத்திலும் பங்கு கொள்கின்றவன் என்ற வகையில் பல்வேறு ‘ஜூம்’ (Zoom) வழி கலந்துரையாடல்கள் வாட்சப் உரையாடல்களில் கலந்துகொள்கிறேன். சிலர் உடனடி பொருளாதார மீட்சி குறித்தும், சிலர் இடைக்கால தீர்வு குறித்தும் கலந்துரையாடுகிறார்கள். நீண்டகால தீர்வு என்பது அரசியலமைப்பு மாற்றத்துடன் நோக்கப்படுகிறது. இடைக்கால தீர்வாக 21-வது திருத்தம் அமையலாம் என கருதுகிறார்கள். ஆனால், இலங்கை ஓர் அரசியலமைப்பு மாற்றத்தை மட்டுமன்றி ஒரு மறுசீரமைப்பை (reforms) வேண்டி நிற்கிறது என்பதே யதார்த்தமானது. அதில் அரசியல் அமைப்பு மாற்றம் ஓர் அங்கம் மாத்திரமே.

அரசாங்கத்தின், எதிர்கட்சிகளின் பொறுப்பு, தேசிய அரசாங்கத்தின் கடப்பாடுகள் என்ன?
இலங்கை எதிர்நோக்கும் மறுசீரமைப்புக்கான அவசியத்தை ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்ளிட்ட (தேசிய அரசாங்கம் என்ற ஒன்று இருக்குமெனில் அதுவும்) தரப்புகள் உணரவேண்டும். துரதிர்ஷ்டவசமாக அது அவ்வாறு அமையவில்லை. கோட்டாவை வெளியேற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என எண்ணுவது தவறு. இலங்கையின் இப்போதைய பின்னடைவு கோட்டா காலத்தில் ஏற்பட்டிருக்கிறதே அன்றி மறுசீரமைப்புக்கான தேவை சுதந்திரத்துக்கு பின் இருந்தே இருந்து வந்துள்ளது. இலங்கை பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் தொடர்ச்சியைக் கொண்டு நடாத்தியதே அன்றி தனக்கான ஆட்சி முறை குறித்த சிந்தனைக்குச் செல்லவில்லை அல்லது அப்படி செல்ல எத்தனித்தால் அதனை இனவாத / மதவாத முனைப்புடன் செய்து வந்தார்கள்.

1956-ல் மொழி அடிப்படையில் சிங்களத்தை (தனிச் சிங்களச் சட்டம் ) முன்னிறுத்தவும் 1972-ல் மத அடிப்படையில் (அரசியலமைப்பில் பௌத்த நாடு எனும் முன்னுரிமை) சிங்களத்தை முன்னிறுத்தி ஆட்சி செய்யவும் நினைத்தார்களே அன்றி, தேசத்தை (மக்களை) முன்னிறுத்திய திருத்தம் ஒன்றையோ முன்மொழிவு ஒன்றையோ செய்ய முன்வரவில்லை. மேற்படி இரண்டு நிலைகளிலும் நாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவு நிலையை சமூகப் பின்னடைவாகப் பார்க்காது ‘பொருளாதார’ பின்னடைவாக மாத்திரம் பார்த்து திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகம் செய்தார்கள். இதனால், நாட்டிற்குள் கட்டுக்கடங்காத இறக்குமதி வந்துசேர தற்சார்பு பொருளாதாரத்தில் இருந்து விடுபட்டு தரகு பொருளாதார முறைமைக்குள் சென்றதன் உச்சம் இன்று ‘நெல் வயல் விதைப்பையும்’ கூட இறக்குமதி ஆட்டிப் படைக்கிறது. ஏற்றமதியில் உச்சத்தில் இருந்த பெருந்தோட்டத் துறையைக் கைவிட்டு ஆடை ஏற்றுமதியில் அக்கறை காட்டினார்கள். ஆனால், அதற்குரிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலையில் அதுவும் வீழ்ந்து கிடக்கிறது. எனவே, மாற்றம் என்பது மறுசீரமைப்பாக வரும்போது அரசியலமைப்பு மாத்திரமன்றி பொருளாதார மறுசீரமைப்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

மக்கள் இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்வது?
மக்களுக்கு தாமாக இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீண்டுவர எந்த மார்க்கமும் இல்லை. அவர்கள் அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படுகின்றனர். உழைப்பதற்கான தமது நேரத்தை பொருட்களைப் பெறுவதற்கான வரிசையில் காத்திருந்து வீண்டிக்கிறார்கள். பொருளாதார கொள்கை மாற்றி அமைக்கப்படும் போது மட்டுமே மக்களால் மீண்டு எழ முடியும்.

இதற்கு பொருளாதார நிபுணர்களும் கொள்கை வகுப்பாளர்களும் பாரிய பங்களிப்பைச் செய்ய வேண்டி உள்ளது.

இலங்கையின் பொருளாதார நிபுணர்கள், புத்திஜீவிகள் இந்தச் சூழலில் எத்தகைய பங்களிப்பைச் செய்கிறார்கள்? இவர்களுடைய முந்திய பங்களிப்பென்ன? இனி எப்படிச் செயற்பட வேண்டும்?
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் உரையாடலில் இப்போது பொருளாதார நிபுணர்களும் கொள்கை வகுப்பில் பங்குகொள்ளக் கூடியவர்களும் ‘சுயாதீனமாக’ ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது. ஏனெனில், ஆளும் அரசாங்க கட்சி பக்கமாக அல்லது எதிர்கட்சி பக்கமாக சார்ந்து நின்று பொருளாதார கொள்கை முன்வைப்பைச் செய்யும் அரசியல் அணியினராக நிபுணர்களும் இருந்தார்கள். இந்த கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். நிபுணர்களை, நிபுணர்களாக அன்றி அரசியல் அணிசார்ந்தே நோக்கும் தன்மை இலங்கையில் வெகு சரளமாகவே பார்க்கலாம். அவர்கள் அரசியல்வாதிகளாகவே செயற்பட்டாலும் கூட ஒரு துறைசார்ந்த நிபுணராக பணியாற்றும் போது அத்தகையதொரு நிபுணராகவே அவரை நோக்கும் வகையில் செயற்பட்டவர்கள் மிகக் குறைவு.

உதாரணமாக, இந்தியாவில் அண்ணல் அம்பேத்கரை எடுத்துக்கொள்வோம். அவர் அரசியல்வாதியாக இருந்தே பல அளப்பரிய பங்களிப்பை இந்தியாவுக்கு வழங்கியுள்ள போதும் அவர் அரசியல்வாதியாக அன்றி ஒரு நிபுணராக, மேதையாக அறியப்படுவதே உலகளாவிய ரீதியில் மேலோங்கி நிற்கிறது. அவர் எந்தக் கட்சியில் அங்கம் வகித்தார் என யாருமே சட்டென நோக்க மாட்டார்கள். அவரது அரசியலமைப்பு எண்ணக்கரு இன்றும் கூட பல்லின / பல்மொழி இந்தியாவை எப்படி ஒன்றிணைத்து வைத்திருக்கிறது என்பதற்கு பாரிய உதாரணமாகிறது.

1972-ம் ஆண்டு இலங்கையில் முதலாவது குடியரசு அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது கொல்வின் ஆர் டி சில்வா அத்தகையதொரு பணியை ஆற்றியருக்கலாம். ஆனால், அவர் தலைமையில் உருவான அரசியலமைப்பு ஐந்து ஆண்டுகளில் மறைந்து போனது. துரதிர்ஷ்டவசமாக சுதந்திரமடைந்து 25 ஆண்டுகளுக்குப் பின்னரே இலங்கை தனக்கான அரசயலமைப்பை உருவாக்க எண்ணி, அது ஐந்தே ஆண்டுகளில் இல்லாமல் போய், அதற்கு முற்றிலும் தலைகீழாக இரண்டாம் அரசியலமைப்பு உருவாக்கம் பெற்று, இப்போது 20 திருத்தங்களையும் கண்டுவிட்டது. இவை யாவும் அரசு சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னிறுத்தாது ஆளும் அரசாங்கத்தை முன்னிறுத்தியதாக மேற்கொள்ளப்பட்டமையே இன்றைய நிலைக்குக் காரணமாகும்.

எனவே,

இன்றைய நிலையில் கட்சி சார்பற்ற அதே நேரம் அரசியல் புரிந்துணர்வுள்ள பொருளாதார நிபுணர்களினதும், பொருளாதாரப் புரிந்துணர்வுள்ள அரசியல் நிபுணர்களினதும் பங்களிப்பு அவசியமாகிறது.

நாட்டின் உற்பத்தித் துறையை எப்படி எதிர்கொள்ளலாம்?
திணைக் கோட்பாட்டை இலங்கை அளவு பயன்படுத்தக்கூடிய நாடு வேறு இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. குறிஞ்சி – முல்லை – மருதம் – நெய்தல் என நால்வகை நிலமும் சம விகிதத்தில் பெற்றுக்கொண்ட நாடு இலங்கை. பொதுவாக நான்கு பக்கம் சூழ்ந்த கடலை நாம் எந்தளவுக்கு பொருளாதார ரீதியாக பயன்படுத்திக்கொண்டுள்ளோம் எனும் பெருங்கேள்வியை எழுப்ப வேண்டி உள்ளது. குறிப்பாக உள்நாட்டில் அனைத்துப் பகுதிக்கும் கடலுணவுப் பொருட்களை விநியோகிக்கும் மார்க்கத்தையே நாம் கண்டடையவில்லை.

சீன கம்பனி வடக்கில் கடல் அட்டைப் பண்ணை நிறுவுவதும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க வருவதும் அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறதே தவிர அதனை பொருளாதார முக்கியத்துவத்துடன் அணுகி தீர்வு தேட முனையவில்லை.

வயல்வெளிகளை உரிய முறையில் கையாள போதிய தொழிநுட்பங்களை கண்டடைவது. குறிப்பிட்ட அளவே அமைந்த நிலத்தை வணிகப் பயிராக வயல்வெளிப் பயிர்களை கண்டடையும் நடைமுறைகள் உலகளாவிய ரீதியில் உள்ளதை நாம் கற்றுக்கொண்டோமா? அதற்கு பதிலாக அரசியையும் பருப்பையும் கூட இறக்குமதியே செய்தோம். மத்திய மலைநாட்டின் தேயிலையும் இரப்பரும் இந்த நாட்டுக்கு பெற்றுக் கொடுக்காத செல்வமா ? அந்தப் பெருந்தோட்டத் துறையை இன அடிப்படையில் நிர்வகிக்கும் அரசியலை என்னவென்பது? சிங்களவர் என்றால் சிறுதோட்ட ‘உடமையாளர்கள்’, தமிழர்கள் என்றால் பெருந்தோட்டத் ‘தொழிலாளர்கள்’ என நிர்வகிக்கும் மன எண்ணம் எங்கிருந்து வருகிறது? இவற்றையெல்லாம் தான் ‘ மறுசீரமைப்பில்’ மிகுந்த சிரத்தையுடன் அவதானித்து கொள்கை வகுக்க வேண்டும்.

இலங்கைக்கு மிகவும் அவசியமான பிராந்திய அபிவிருத்தி எண்ணக்கருக்கள் (Regional Development Concept) குறித்து சிந்திப்பதற்கு பிராந்திய அரசியல் பார்வை இவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. மாகாண சபை முறைமை அரசியலுக்கானதாக மட்டும் பார்க்கப்படுகிறது. அதனை பொருளாதார பிராந்தியமாகவும் நோக்கப்படுதல்( Economic Region ) வேண்டும். அந்தந்த நிர்வாக அலகுகளுக்கு (Administrative Unit ) அந்தந்த பிராந்திய பொருளாதார அதிகாரம் வழங்கப்படல் வேண்டும்.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘மாநில’ முறைமை இங்கு ‘மாகாண’ முறைமையாக அறிமுகம் செய்யப்படும்போது, மறந்துவிட்ட அல்லது மறுக்கப்பட்ட ஒரு விடயந்தான் இந்த ‘பிராந்திய பொருளாதார’ எண்ணக்கரு. எத்தகைய பொருளாதார விடயங்களை மத்திய அரசு கையாள்வது என்றும் எவ்வாறான விடயங்களை மாகாண அரசு கையாள்வது என்றும் திட்டவரைபு வேண்டும். அவற்றை கண்காணிக்கும் மதிப்பாய்வு செய்யும் (Monitoring & Evaluation) தேசிய கொள்கையும் (National Policy) முன்னெடுப்பும் வேண்டும். சுற்றுலாத்துறை இதில் இணைப்புத் துறையாக அமையும் வண்ணம் திட்டம் வகுக்கலாம்.

சுற்றுலாத்துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
இலங்கையின பௌதீக அமைவிடமும் அதன் உள்ளக அமைவும் (landscaping) காலநிலையும் இலங்கை மக்களின் இயல்பான விருந்தோம்பலும் இலங்கைச் சுற்றுலாத்துறையின் மிகப் பெரிய பலம். இலங்கை அரசியல் ரீதியாக நிலைபேறாகும்போது (Sustain) இயல்பாகவே சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவர்.

கடற்கரையையும் மலையுச்சியையும் அரை நாட் பொழுதுக்குள் அடைந்துவிடும் அபூர்வமான பௌதீக அமைப்பு வாய்த்த நாடு இது. ஆனால், அதற்கேற்ற திட்டமிடல்கள் இங்கு குறைவாகவே உள்ளது.

சுவற்சலாந்தின் பல சுற்றுலா அம்சங்களை இங்கே கொண்டு வரலாம். கூடவே கடலும் கடற்கரையும் நமக்கு மேலதிகமாக கிடைக்கிறது. கிழக்கே பாசிக்குடாவில் காலையில் நீராடி மகிழும் சுற்றுலாப்பயணி மாலையில் பதுளை மாவட்ட மலைகளைச் சென்றடையலாம். ஆனால், இந்த அனுபவத்தை சுற்றுலா பயணிக்கு உணர்த்தும் வகையில் அந்தத் திட்டம் வடிவமைக்கப்படல் வேண்டும். உதாரணமாக ‘சின்ன சிவனொளிபாதமலை’ எனும் பதுளை – எல்ல பிரதேசம் சுற்றுலாப் பயணிகளாலேயே அடையாளம் காணப்பட்டு விருத்தி கண்டது. ஒரு அரசாங்கமாக அல்லது அதற்கு பொறுப்பான நிறுவனம் இத்தகைய விடயங்களை அடையாளம் காணவில்லை என்பது வேதனைக்குரியதுதானே. சுற்றுலாத்துறை உலகளாவிய ரீதியில் பல மூலோபாய திட்டங்களுடன் முன்செல்கிறது. இலங்கையில் இது முறைசாரா (informal) முறையாகவே அமைந்து காணப்படுகிறது. அதனை அடையாளம் கண்டு முறைப்படுத்தல் வேண்டும்.

மாற்றுப் பொருளாதார ஏற்பாடுகளை எப்படிச் செய்யலாம்? சர்வதேசத்தின் பங்களிப்பு எவ்வறானதாக இருத்தல் வேண்டும்?
இலங்கையின் மனித வளத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. தொழிநுட்ப அறிவை உள்வாங்கக்கூடிய, கலை ரசனை கொண்ட, சூழலுக்கு ஒத்துழைக்கும் மனப்பாங்கு கொண்ட மனித வளத்தை கொண்ட நாடு இது. வெளிநாடுகளுக்குச் சென்ற எம்மவர்கள் இன்று எத்தனை மொழிகளில் பேசுகிறார்கள். வீட்டுப் பணிப்பெண்களாக /உடல் உழைப்புக்காக அரபு நாடுகளுக்குச் செல்பவர்கள் வரும்போது சரளமாக அரபி மொழியில் பேசுகிறார்கள். பாடத்திட்டக் கல்விக்கு அப்பாற்பட்ட ஆளுமை பலரிடத்தில் காணக்கிடைக்கிறோம். இவர்களைச் சரியாகப் பயன்படுத்தும் வகையில் சர்வதேச முதலீடுகளும் கைத்தொழில் வசதிகளும் ஏற்படுத்தப்படல் வேண்டும்.

தென்கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளை இதற்கு உதாரணமாக கொள்ள முடியும். முதலீட்டாளர்களை உள்ளே இழுக்கும் அடிப்படைக் கட்டுமானங்களை (infrastructure) அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களிடம் ‘கமிஷன்’ கேட்கும் அரசியல் கலாசாரம் மாற்றப்படுதல் வேண்டும். ஏற்றுமதி நோக்கிய இலத்திரனியல் கைத்தொழில்கள் பல உலகளாவிய ரீதியில் இயங்குகின்றன. அவற்றைக் கண்டறிந்து இலங்கையில் ஊக்குவிக்கவும் வேண்டும். ‘ மோட்டரோலா’ எனும் கம்பனி இலங்கையில் முதலீடு செய்ய வந்து பின்னர் அரசியல் அழுத்தங்களால் மலேஷியா சென்றது. இப்போது மலேஷியா நிலை என்ன இலங்கை நிலை என்ன? இலங்கை இளைய தலைமுறையினர் வெளிநாடு செல்வதற்காகவே இங்கே படிக்கிறார்கள் என்பது இலங்கை தன்னை அபிவிருத்திக்கு தயார்படுத்தவில்லை என்பதன் குறியீடுதானே. சர்வதேசம் நம்பிக்கை கொள்ளும் அரசியல் ஸ்திரத்தன்மை நாட்டில் உருவாக வேண்டும்.

அரசாங்கத்திலும் ஆட்சியதிகாரத்திலும் மட்டும் குற்றம் சாட்டிவிட்டு பலரும் தப்புகிறார்கள். அரச உயர் அதிகாரிகள் தொடக்கம் பொறுப்புமிக்க அத்தனை உத்தியோகத்தர்களுக்கும் கூட இந்தச் சீரழிவிலும் நெருக்கடியிலும் பொறுப்புண்டே?
நிச்சயமாக. இதனால்தான் அரசியலமைப்பு மாற்றத்திற்கு அப்பால் ‘மறுசீரமைப்பு’ குறித்த கவனத்தைப் பற்றி பேசினேன். அரச கட்டமைப்பு – அரசாங்க கட்டமைப்புக்கு நிகராக நிர்வாகக் கட்டமைப்பு குறித்தும் மறுசீரமைப்பு அவசியம். ‘ கோழி மேய்ச்சாலும் கோர்மந்தில கோழி மேய்க்கோணும்’ எனும் பழைய சித்தாந்தம் மாற்றப்பட வேண்டும். ஓய்வூதியத்துக்காக அரசாங்க உத்தியோகம், பொறுப்புக்கூறல் இல்லாமை, வேலை செய்யாமலே நேரம் போக்குதல், ஊழல் என பல குற்றச்சாட்டுகள் அரச சேவையில் உள்ளன. ஒரு சிலர் மாற்றி யோசித்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனரே தவிர பெரும்பாலானோர் அரசாங்க உத்தியோகம் என்றால் இப்படித்தான் என அதனைக் கலாசாரமாக்கி விட்டார்கள். எனவே, இந்தச் சீரழிவுக்கு அந்தக் கலாசாரமும் காரணமே. கூடவே அரசியல் பொருளாதாரம் குறித்த பொது மக்களின் அக்கறையின்மையும் கூட இன்றைய சீர்குலைவுக்குக் காரணமே. லஞ்சம் – ஊழலை வழமையாக்கிக் கொண்டதில் பொது மக்களுக்கும் பங்கு உண்டு.

மக்களை எப்படி வழிப்படுத்தலாம்? அதற்கான பொறுப்பு?
‘மறுசீரமைப்பு’ என்ற ஒன்று கொண்டு வரப்பட்டு அது படிப்படியாக நடைமுறைக்கு வரும்போது மக்கள் தாமாகவே வழிப்படுத்தப்படுவார்கள். இப்போது வரிசையில் நிற்கப் பழகியவர்கள் இயல்பாகவே சில ஒழுக்கங்கள் நோக்கி நகரும் அளவுக்கு ‘மறுசீரமைப்பு’ அமைதல் வேண்டும். குறிப்பாக கல்வி ‘மறுசீரமைப்பு’ அவசியமாகிறது. பாடத்திட்டத்தில் சட்டம் / விழுமியங்கள் / பெறுமானங்கள்/ மானுடவியல் குறித்த உள்ளீடுகள் தேவைப்படுகின்றன. மதக்கல்வி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட பல விடயங்களை வழங்கவில்லை. மாறாக மதப்பற்றாளர்களையே அது உருவாக்கியுள்ளது. லஞ்சம் வாங்குவது போன்றே கொடுப்பதும் தவறென்ற புரிதலும் பொதுமக்களுக்குள் வரவேண்டும்.

‘மறுசீரமைப்பு’ குறித்து அதிகமாக உங்களது கவனம் செல்கிறது? அதன் சாத்தியம் குறித்து கூறுவீர்களா?
இப்போது ஏன் கோட்டாவை வீட்டுக்கு அனுப்ப முடியாமல் உள்ளது எனும் கேள்வியை முன்வைத்தால் அதற்கு அரசியல் அமைப்பே காரணம் எனலாம்.

கோட்டாவின் தலைமை இந்த நாட்டுக்கு எத்தனையோ சிக்கலை உருவாக்கிவிட்டது. ஆனாலும் அவர் விலகி வீடு செல்ல வேண்டும் என இன்னும் நினைக்காமல் இருப்பது இலங்கையில் ‘மறுசீரமைப்பு’ ஒன்றிற்கான அவசியத்தை உணர்த்தவில்லையா? அரசியலமைப்புக்கும் மேலான ஒரு அதிகார படிநிலையை நாம் உருவாக்கிக் கொண்டுள்ளோம்.

அவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இருக்கும் போதே அவரது பெற்றோரின் நினைவுச்சின்னங்கள் அழிக்கப்பட்டும் சிலைகள் உடைக்கப்பட்டும், வீடுகள்கொழுத்தப்பட்டும் அவரது குடும்பத்தைச் சந்தி சிரிக்கச் செய்யும் பல நிகழ்வுகள் நடந்தும் இவரால் தவறுக்கு பொறுப்பேற்று பதவி விலகி செல்லும் மனநிலைக்கு வரமுடியவில்லை எனில், இவர்களைப் போன்றவர்களை அரசியலமைப்பு மாற்றத்தால் மாற்று நிலைக்கு கொண்டுவரமுடியுமா ? என சிந்தித்தால் தேவை மறு சீரமைப்புபுக்கான அவசியம் புரியும்.

அரசியலமைப்பு, பொருளாதாரம், பொது நிர்வாகம், கல்வி , நீதித்துறை, பாதுகாப்புத்துறை, எல்லை மீள்நிர்ணயம், தேர்தல் முறைமை, பாராளுமன்ற ஒழுக்கக் கோவை என சகல விடயங்களிலும் கவனம் செலுத்தியதாக ‘மறுசீரமைப்பு’ அமைய வேண்டும். அதனை ‘இடைக்கால அரசியலமைப்பு’ ஒன்றின் ஊடான ‘இடைக்கால அரசாங்கத்தை’ அமைத்து ஒரு கால எல்லை அடிப்படையில் (Timeline) நிறைவேற்ற வேண்டும். இதற்கான உலக அனுபவங்களை கற்றல் வேண்டும். தென் ஆப்பிரிக்க, நேபாள அனுபவங்கள் இலங்கைக்கு பொருந்திப் போகக் கூடியது . இது குறித்து விரிவாக ஆராய்தல் வேண்டும்.

Thank you – WOW Thamilzha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here