மட்டக்களப்பு மாநகர சபையின் கலை கலாசார குழுவினால் மாதாந்தம் நடாத்தப்பட்டுவரும் பௌர்ணமி கலைவிழாவினை கலை கலாசார குழுத்தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான மா.சண்முகலிங்கம் தலைமையில் நேற்று (07) திகதி மாலை இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் மாநகர சபை கீதம் இசைக்கப்பட்டு மௌன இறைவணக்கத்தினை தொடர்ந்து கதிரவன் கலைக்கழக உறுப்பினர்களினால் தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டு அதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

எமது மண்ணுக்கே உரித்தான கலை கலாசார நிகழ்வுகள் கதிரவன் கலைக்கழகத்தினால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டதுடன் கதிரவன் கலைஞர்களின் நகைச்சுவை நாடகம், ‘தற்கால வாழ்க்கை சுகமானதா? சுமையானதா?’ எனும் தலைப்பில் கதிரவன் பட்டிமன்ற குழுவின் 101 வது சிறப்பு பட்டிமன்றமும் இதன் போது அரங்கேற்றப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மாநகர பிரதிஆணையாளர் உ .சிவராசா, மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பெரும்திரளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு கண்கவர் கலை, கலாசார நிகழ்வுகளை கண்டு மகிழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மாதாந்தம் முழு மதி தின கலை நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.