மட்டக்களப்பு திருப்பெரும்துறை பிரதேசத்தில் தனியார் தென்னம் தோப்பு காணியில் மாநகர சபையினால் கொண்டு; சென்று கொட்டப்பட்ட குப்பை மேட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) ஏற்பட்ட பாரிய தீயையடுத்து அந்த பகுதியிலுள் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளதையடுத்து தீயணைக்கும் படையினர் பொலிசார், விசேட அதிரடிப்படையினர்; தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான பள்ளமாக உள்ள தென்னம் தோப்பு காணியில் குப்பைகளை கொட்டி நிரப்புவதற்காக மாநரசபைக்கு காணி உரிமையாளர்கள் இருவர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து 3 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணியில் தினமும் பாரியளவிலான குப்பைகளை உழவு இந்திரம் மற்றும் கனரக வாகனங்களில் கொண்டு சென்று கொட்டிவருகின்றனர். இந்த நிலையில் சம்பவதினமான இன்று மாலை 4 மணிக்கு குப்பைமேட்டில் தீ பற்றி எரிய ஆரம்பித்ததையடுத்து அந்தபகுதியிலுள்ள தென்னை மரங்கள் மற்றம் மரங்களில் தீப்பற்றியதுடன் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் தீ பரவி எரியதொடங்கியதையடுத்து தீயணைக்கும் படையினர் தீயை குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்..
அதேவேளை சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்தும் குப்பைகள் எரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
(கனகராசா சரவணன்)