மலையக மண்ணை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகளை ஏன் வெற்றி பெறச் செய்ய வேண்டும்?

0
136
இன்று சிவப்பு சாயம் பூசப்பட்ட ஒரு புரட்சியைப் பற்றி பொதுவாக பேசப்பட்டு வருகின்றது. அந்தப் பேச்சுளால் எழுந்த காய்ச்சலினால் பழைய தலைமைத்துவங்கள் அனைத்தும் துடைத் தெறியப்பட வேண்டும் என்ற முழக்கம் பெரிதாகியுள்ளது.
கார்ல் மார்க்ஸின் சிந்தனையை நடைமுறைப்படுத்த ஒரு  லெனின் தேவைப்பட்டார். அதைப்போலவே கம்யூனிசத்தை இறுக்கமான ஒரு ஆட்சி முறையாக முன்னெடுப்பதற்கு ஜோசப் ஸ்டாலின் தேவைப்பட்டார்.
உலகின் மிகப்பெரிய கம்யூனிச நாடாக சோவியத் ரஷ்யா கட்டி எழுப்பப்பட்டது. இரும்புத்திரை கொண்டு ஆட்சி நடத்தப்பட்டு கொண்டிருந்த சோவியத் ஒன்றியம் சுக்கு நூறாக உடைந்து போனதற்குக் காரணம்; மிக்கேல் கொர்ப்பசேவ்.  மக்களிடமிருந்த ஜனநாயக தேவையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா  மிக்கல் கோர்ப்பச்சேவின்  பெரெஸ்த்ரோயிக்கா   சிந்தனையை ஊக்கப்படுத்தி சோவியத் ஒன்றியம் பிளவுபட காரணமாக அமைந்தது. அப்படி ஒரு நிலைமை இலங்கையில்  வராது என்று சொல்வதற்கு எந்த விதமான காரணங்களும் இல்லை.
அதற்கான சாத்தியப்பாடுகள் மிக அதிகமாக இருக்கின்றன.  இன்று அதிகாரத்தில் இருக்கின்ற கட்சியைப் பற்றி குறை கூறுவதற்கில்லை. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக் கொண்ட ஆட்சியாக அது அமைந்துவிடக் கூடாது என்ற அவதானமும் அவசியமானது.  அதற்கான காரணங்களாக அமைவன…
1. தமிழர்களைப் பற்றி அதுவும் குறிப்பாக மலையகத் தமிழர்களை பற்றியும் அவர்களது எதிர்கால வாழ்வாதாரத்தை பற்றியும் தெளிவாக பேசக் கூடியவர்கள் அதில் யாரும் இல்லை .
2. அப்படி இருந்தாலும் அவர்களால் பேச முடியாது.யார் வெற்றி பெற்றாலும் அக்கட்சியின் தலைமைத்துவமே தீர்மானிக்கும். யார் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?  என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும் ? என்றெல்லாம் வரையறை செய்யப்பட்டிருக்கும்.
3.  கட்சியின் உயர்பீடம்  எடுக்கின்ற தீர்மானத்திற்கு எதிராக வேறு யாராலும் கருத்து சொல்ல முடியாது. ஆகவே அதில் தெரிவு செய்யப்படுகின்ற தமிழ்  பிரதிநிதிகளால் தமிழ் இனம் சார்ந்த தன் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு குரல் எழுப்ப முடியாது. இதற்கு உதாரணமாக மக்கள் விடுதலை முன்னணியின் ( JVP கட்சி)  பொதுச் செயலாளர் சொல்லிய கருத்தினை இங்கே முன்வைக்க விரும்புகிறேன்.
 “இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை. இருப்பதெல்லாம் பொருளாதார பிரச்சினை யே!.  இளைஞர்கள்  இனப்பிரச்சினை பற்றி பேசுவதில்லை. ஆகவே அதிகார பகிர்வு ஒன்று அவசியம் அற்றது”
 என்ற ரீதியில்  சொல்லப்பட்ட கருத்து எதனைக் குறிக்கின்றது என்றால்: சிறுபான்மை மக்களது  பிரச்சினைகள் தொடர்பில்  போதிய  அணுகு முறையை இன்னமும் இவர்களால் கைக்கொள்ள முடியவில்லை என்பதே.
4. பெருந்தோட்ட துறையை பலப்படுத்தி அதனை  ஒரு இலாபமீட்டும் துறையாக மாற்றி அமைத்து இங்கே வாழுகின்ற மக்களுக்கும் அரசுக்கும் பாரமற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவது எப்படி என்பதை பற்றிய எந்தவிதமான தெளிவும் இவர்களிடம் காணப்படவில்லை .
5. மாறாக சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதன் ஊடாகவும் அதனை பிரதான வருவாய் தருகின்ற தொழிலாக மாற்றுவதுமே  இவர்களுடைய குறிக்கோளாக இருக்கின்றது. சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதால் மலையக மக்கள் அனைவருமே பயன்பெற்று விடுவார்கள் என்று சொல்வதற்கு எவ்விதமான அடிப்படையும் இல்லை. ஏனெனில் சுற்றுலாத் துறைக்கான நிலை களங்கள் பரவி கிடக்கின்றது என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆகவே, தேயிலையையே நம்பி இருக்கின்ற பலர் பொருளாதாரப்  பாதிப்புக்கு உள்ளாகுவர் என்பது உறுதி.
6. மேலும் இவர்கள் தனி வீட்டு திட்டத்தை ஆதரிக்கவில்லை. நீளமாக இருக்கின்ற குடியிருப்புகளை உயரமாக்குவோம் என்று தான் இவர்கள் பிரச்சாரம் அமைந்திருக்கின்றது . அதற்கு இவர்கள் சொல்லுகின்ற காரணம் பெரறுமதி வாய்ந்த விவசாய நிலங்கள் வீணடிக்கப்படுகின்றன என்பதாகும்.
  200 வருடங்களுக்கு மேலாக இந்நாட்டிற்கும் இம்மண்ணிற்கும் தன் உதிரத்தையும், வியர்வையையும் உடலையும் மண்ணுக்கு விதைத்த இம்மக்கள் தனி வீட்டு திட்டங்களின் ஊடாக  லயன் வாழ்க்கையிலிருந்து வெளிவருவதற்கு உதவாமல் அதிலேயே நவீன மாடி லைன்களாக கட்டிக் கொடுப்பது அவ்வளவு  பொருத்தமானதாக இருக்காது.
 தேசிய மக்கள் சக்தி ( NPP) தலைமைகளோடு  கலந்துரையாடிய போது அவர்கள் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருப்பது தெரியவந்தது. என்.பி.பி ஆட்சி அமைக்க கூடாது என்பது இங்கு  கருத்து அல்ல.  சிறுபான்மை, சிறு  கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும் நிலை வரவேண்டும். அப்போதே அதன், அவர்களின் முக்கியத்துவத்தை உணர்வார்கள்.  அவர்களின் கருத்துக்களையும் கவனத்தையும் சிறுபான்மை கட்சிகள் மீதும் செலுத்துவார்கள்.
பாராளுமன்றத்தில் போதிய பலம் இல்லாத நிலையிலேயே 1949ஆம் ஆண்டு 48ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் குடியுரிமை இல்லாதவர்கள், வாக்குரிமையை இழப்பார்கள் என்ற சரத்து சேர்க்கப்பட்டதால், அதற்கு முந்தைய 1947ஆம் ஆண்டுத் தேர்தலில் வாக்களித்துத் தெரிவு செய்யப்பட்ட  7 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தமது வாக்குரிமையை இழந்தமையும்,
 1956 ஆம் ஆண்டு தனி சிங்கள சட்டமும் அமுல்படுத்தப்பட்டமையும், இன்னமும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
 மலையகத்தின் தலைமைகள் எதனையும் செய்யவில்லை என்று நாம் சொல்ல முடியாது. அவர்கள் செய்தது போதாது என்பதுதான் உண்மை.  பேரம் பேசுதல் ஊடாகவே காலத்துக்கு காலம்  ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அண்மையில் கோரப்பட்டு இருந்த ஆசிரியர் உதவியாளர் நியமனங்களை பற்றி தெளிவான ஒரு முடிவினை சொல்லுங்கள் என்று இன்றைய ஆட்சியிலுள்ள தலைமைகளிடம் எந்தவிதமான சாதக சமிக்ஞைகளையும் காணக்கிடைக்கவில்லை.
அண்மைக் காலமாக நியமிக்கப்பட்ட எந்த ஒரு உயர் பதவிக்கும் மலையகத் தமிழர் ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்.
ஆகவே, தமிழர் ஒருவரை வெற்றிபெற செய்வது தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவது என்பது ஒரு மாயை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மலையக மண்ணை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகளை வெற்றிபெறச் செய்யுங்கள். அது எந்தகட்சி, அல்லது எந்த சுயேட்சை குழு என்பதை ஆராய்ந்து நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். மலையக  மண்ணின் மைநத்ன நிலையிலிருந்து பேசும் கட்டுரை இது
சின்னையா இரவிந்திரன்- 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here