முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமெரிக்காவில் தங்கியிருந்த போது கிட்டத்தட்ட 500 மடிக்கணினிகள் நன்கொடையாக தனக்கு கிடைத்துள்ளதாக வீடியோவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மடிக்கணினிகள் அமெரிக்காவில் வசிக்கும் வர்த்தகர்கள் மற்றும் சாதாரண பிரஜைகள் உட்பட இலங்கையர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வழங்கிய காணொளியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மடிக்கணினி விநியோகம் தொடர்பில் பொய்யான விளம்பரங்களை பரப்பி பொதுமக்களை ஏமாற்றுவதற்கு பலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மடிக்கணினிகள் தேவைப்படும் சிறுவர்கள் பாடசாலை அதிபரின் பரிந்துரையுடன் எழுத்து மூலம் உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைத்து தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக தம்மை தொடர்பு கொண்டு மடிக்கணினிகளை பெற்றுக்கொள்ளுமாறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மடிக்கணினிகளுக்கான உத்தியோகபூர்வ கோரிக்கை கடிதங்களை தனது 077-3624927 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் தெரிவித்த ராமநாயக்க குறித்த இலக்கத்திற்கு அழைப்பு எடுப்பதை தவிர்க்குமாறும் கேட்டுள்ளார்.