ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் முதல்கட்ட தகவலின்படி இந்த விபத்துக்கு மனித தவறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாகப்பட்டினம் – ராயகடா ரயில் சிவப்பு சிக்னலை கவனிக்காமல் மீறிச் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே விசாரணை தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

13 பேர் பலி: முன்னதாக, ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் பாதையின் மேல் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக அந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. ரயில்வே ஊழியர்கள் அந்தப் பிரச்சினையை சரி செய்யும் பணியில் அப்போது ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பயங்கரமாக மோதியது.

இந்த ரயில் விபத்தில் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் ஏராளமான பயணிகள் சிக்கிக் கொண்டு காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள், போலீஸார், மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 13 பயணிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 40 பேருக்கு தீவிரக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த விஜயநகர ஆட்சியர் எஸ்.நாகலட்சுமி தெரிவித்தார்.

இந்த விபத்தில் ரயிலின் லோகோ பைலட், உதவி லோகோ பைலட் மற்றும் ரயில்வே காவலர் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.