அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தில் ட்ரெக்டர் வாகனம் விபத்தில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சங்குபிள்ளை கந்தையா (வயது 48) என்ற தொழிலாளி குடும்பத்துக்கு வீடு மற்றும் காணி சலுகைகளுடன் 30 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தோட்ட நிர்வாகம் (12) இன்று இணக்கம் தெரிவித்துள்ளது.
இ.தொ.கா பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் தோட்ட நிர்வாகத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;-
கடந்த (05)ஆம் திகதி டொரிங்டன் தோட்ட தொழிற்சாலையிலிருந்து கல்மதுறை தோட்டத்திற்கு உரம் மூட்டைகளை ஏற்றி சென்ற டெக்கர் வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் உர மூட்டைக்குள் சிக்குண்டு விபத்துக்குள்ளான தொழிலாளர்களில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சங்குபிள்ளை கந்தையா (வயது 47) 11 காலை உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த தொழிலாளிக்கு சவப்பெட்டி, மற்றும் மரணச் சடங்கு செலவு மாத்திரம் பொறுப்பேற்பதாக டொரிங்டன் தோட்ட நிர்வாகம் உயிரிழந்தவரின் குடும்பத்திடம் தெரிவித்துள்ளது.
ஆனால் தொழில் நிமிர்த்தம் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளி மற்றும் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும் இதற்கான நீதி கிடைக்கும் வரை தாம் பணிக்கு திரும்பப் போவதில்லை என டொரிங்டன்,ஸ்டார்,எல்பெபத்த ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் இன்று (12) காலை தொடக்கம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் இராமன் கோபால் கொண்டு சென்றிருந்தார்.
இதையடுத்து இன்று (12)) காலை அக்கரப்பத்தனை பிரதேசத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஜீவன் தொண்டமான் டொரிங்டன் தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடினார்.
இதன்போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 30 இலட்சம் பணமும்,வீடு வசதியில்லாத நிலைமை சுட்டிக்காட்டப்பட்டதால் தற்காலிகமாக தோட்டத்தில் உத்தியோகஸ்தர் விடுதி ஒன்றை மீள் புனரமைத்து தரவும், வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்ல தோட்ட தேயிலை காணியில் ஒரு பகுதியை குத்தகை அடிப்படையில் தோட்ட நிர்வாகம் வழங்கவும் உறுதியளித்துள்ளது.
அத்துடன் உயிரிழந்த தொழிலாளிக்கான சவப்பெட்டி செலவு மற்றும் மரணச் சடங்கு செலவினை தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்பதாக இணக்கம் தெரிவித்துள்ளது.
ஆ.ரமேஸ்.