இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்பார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் பதவி விலகுமாறு கோருவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சித் தலைவர்கள் உடனடியாக இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் சில குளறுபடிகள் இருப்பதாகவும், பல மாற்று வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
சபாநாயகரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்