அட்டனில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாரிய எதிர்ப்புப் போராட்டம்

0
236

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வழங்குமாறு வலியுறுத்தி, ஹட்டன் நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் பாரிய போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வழங்க, பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் கூட்டணியின் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், எம்.வேலுகுமார், முன்னாள் மாகாண உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், தொழிலாளர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

‘மலையக பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை’, ‘சம்பள உரிமை’, ‘வீட்டு உரிமை’, ‘வேலைவாய்ப்புக்கள்’ என்பன இதன்போது வலியுறுத்த ப்பட்டதுடன், தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீள பெறப்பட்டமை தொடர்பிலும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்..

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்தி ருந்ததுடன், ஹட்டனில் உள்ள சில கடைகளிலும், முச்சக்கரவண்டிகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கலகத் தடுப்பு பிரிவினரும், நீர் தாரை பிரயோக வாகனமும், அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் பெருந்தொகையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.

ஹட்டன் நகர புட்சிட்டி பகுதியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்து ஹட்டன் பிரதான நகர் வழியாக பேரணி மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்தது.

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here