எரிபொருள் வழங்காமையை கண்டித்து அட்டன் தனியார் பஸ் உரிமையாள்கள் சாரதிகள் என பலரும் வீதியை மறித்து இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அட்டன் டிப்போவின் ஊடாக நேற்று மாலை தருவதாக கூறிய எரிபொருள் தராதமையினாலும் இன்று காலை வரை அதற்கு எவ்வித பதிலும் கிடைக்காத நிலையிலேலேயே எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அட்டன் டிப்போவினால் அட்டனில் உள்ள தனியார் பஸ்களுக்கு கடந்த காலங்களில் டீசல் வழங்கப்பட்டு வந்தது.
எனினும், கடந்த 7 நாட்களாக தனியார் பஸ்களுக்கு டீசல் எரிபொருளை வழங்கவில்லை.
இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அட்டன் பஸ் நிலையத்தில் இருந்து சேவையில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை மறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அட்டன் பஸ் நிலையத்திலிருந்து தினசரி நீண்ட மற்றும் குறுகிய தூர பிரதேசங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களின் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் அட்டன் பஸ் நிலையத்தில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நேற்றைய தினம் சில தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்கப்பட்டதாகவும், ஏனையவர்களுக்கு இன்று டீசல் வழங்கப்படும் என தெரிவித்து டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இன்றைய தினம் டோக்கன் வழங்கப்பட்ட பஸ் உரிமையார்கள் டீசல் பெற்றுக் கொள்வதற்காக சென்ற பொழுது, டீசல் இல்லை முடிந்து விட்டது என அட்டன் டிப்போ அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்றைய தினம் இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பொறுப்பானவர்கள் எவரேனும் உத்தரவாதமளிக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என ஆர்பாபட்டக்காரர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தப்பாதிப்பினால் மக்கள் பெரும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.
எம்.கிருஸ்ணா