தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவை இடமாறும் பகுதியில் வாகனமொன்று செவ்வாய்க்கிழமை (10) காலை தீப்பிடித்துள்ளது.
இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தீயை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இரண்டு பொறியியலாளர்கள் பயணித்த கெப் வண்டியொன்று (10) காலை தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீயினால் கெப் வாகனம் தீக்கிரையாகியுள்ளதாக அத்துருகிரிய அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் கெப் வண்டியில் பயணித்தவர்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றின் பொறியியலாளர்கள் இருவர் காலி பிரதேசத்தில் வர்த்தகர்களுக்கான பயிற்சி பட்டறை ஒன்றை நடத்துவதற்காக சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
இரண்டு பொறியாளர்கள் மற்றும் சாரதியும் கெப் வாகனத்தை விட்டு வெளியே வந்தவுடன் வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தின் சுமார் 75 % தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தீ விபத்து காரணமாக கடுவெலயிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற வாகனங்கள் சுமார் 15 நிமிடம் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்துருகிரிய அதிவேக வீதியின் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.