நாட்டு மக்கள் வீட்டுக்கு அனுப்ப துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதியும் ஏற்கனவே தேர்தல் மூலம் நிராகரித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரதமரும் இணைந்து நாட்டை மேலும் சிக்கலுக்குள் தள்ளி வருவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்ற சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நமது நாடு நாளுக்கு நாள் பொருளாதார ரீதியில் மேலும் மேலும் வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
தற்போதய பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை மீட்டேடுப்பார் என கூறி ரணில் விக்ரமசிங்க அவர்கள் புதிய பிரதமாராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மீட்பராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் ஒரு ஊடகவியலாளர் போன்று நாட்டு மக்களுக்கு பிரச்சினைகளை கூறி – தகவல்களை மாத்திரமே வழங்கி வருகிறார்.
வெறுமனே பிரச்சினைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பதை தவிர்த்து – அதற்கான உடனடி தீர்வுகளை தான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிரச்சனை உக்கிரமடைந்து நிலைமை மோசமாவதற்கு முன்பு பட்டினிச்சாவை எதிர் கொண்டுள்ள நாட்டு மக்களை அதிலிருந்து மீட்டு நிலையான தீர்வை வழங்க வேண்டும்.
முன்னர், அமெரிக்க பிரஜைகளும் ஒரு குடும்பத்தை சேர்ந்த பலரும் நாட்டை கொள்ளையடித்து நாட்டினுடைய பொருளாதாரத்தை படுபாதாளத்தில் தள்ளினர்.
தற்போது, நாட்டு மக்கள் – வீட்டுக்கு அனுப்ப துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதியும் – ஏற்கனவே தேர்தல் மூலம் நிராகரித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரதமரும் இணைந்து நாட்டை மேலும் சிக்கலுக்குள் தள்ளி வருகின்றனர்.
புதிய பிரதமர் அவர்கள் பதவி ஏற்ற பின்னர் நாட்டில் ஏற்கனவே காணப்பட்ட வரிசைகள் இரட்டிப்பு அடைந்துள்ளது.
முன்னர் நாட்டுமக்கள் பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய் போன்றவற்றிற்கு வரிசையில் நின்றனர்.
மேலும், தற்போது இந்த பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு – முன்பதிவு செய்வதற்கும் – மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, தற்போது வெளிநாடு செல்ல வெளிநாட்டு வேலை வாய்ப்பு திணைக்களம் மற்றும் குடிவரவு திணைக்களத்தில் மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.
உதாரணமாக, ஒரு குடும்பத்தில் தந்தை பெட்ரோல் டீசல் வரிசையிலும் – தாய் மண்ணெண்னை வரிசையிலும் – மகள் கேஸ் வரிசையிலும் – மகன் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்லும் வரிசையிலும் நிற்கின்றனர்.
சிலரது வாழ்க்கை வரிசையிலேயே முடிவடைகிறது இவ்வாறு வரிசைகளில் நின்று இதுவரை பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
நாட்டில் தற்போது காணப்படும் பொருளாதார பிரச்சனைகளை சமாளிப்பதற்கு – தொடர்ந்து வெளிநாடுகளில் கடன்களை பெற்று மட்டும் – தீர்வு காண முடியாது.
எனெனில், எமக்கு ஒரு மாத்த்திற்கு எரிப்பொருள் கொள்வனவிற்கு 550 மில்லியன் US $ அத்தியாவசிய பொருட்களுக்கு 150 மில்லியன் US $ சமையல் எரிவாயுக்கு US $ 40 மில்லியன் உர 50 மில்லியன் US $ என மொத்தம் 800 மில்லியன் தேவை இதற்கு மேலதிகமாக மருந்து பொருட்களுக்கும் பாரிய நிதி தேவை.
இரசாயன உர இறக்குமதி தட்டுப்பாட்டினால் – நாட்டினுடைய விவசாய முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் அளவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் அவர்களின் கூற்றுப்படி நமது அரிசி தேவையில் 60% மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக கூறுகிறார் அதாவது 40% பற்றாக்குறை
ஆகவே, நாம் பாரிய உணவு தட்டுப்பாட்டையும் எதிர் கொண்டுள்ளோம்.
இந்த பிரச்சினைக்கான தீர்வு என்ன?
இரசாயன உரம் தற்போது ஒரு கீலோ 10,000 முதல் 25,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் மரக்கறி உற்பத்தி குறைவடைந்துள்ளது. தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது இரப்பர் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது
எனவே இவற்றை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான இரசாயன உரம் உடனடியாக சாதாரண விலையில் வழங்க வேண்டும்.
இந்த நிலையில் இந்திய அரசாங்கம் உரம் வழங்க முன்வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இதற்கு நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய பிரதமருக்கும் நன்றி கடமைப்பட்டவரகளாக உள்ளோம்.
அத்துடன, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, பெருந்தோட்டதுறையில் பயிரிடப்படாத சுமார் 9000 ஹெக்டயார் காணிகள் பெருந்தோட்ட மலையக இளைஞர் யுவதிகளுக்கு பிரித்து கொடுப்பதன் மூலம் விவசாயம், பயர்செய்கை, கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு கைத்தொழில் போன்றவற்றில ஈடுப்படுவதன் மூலம் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்தி உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது அதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் மூடப்படும் அபாயம் எற்பட்டுள்ளது பல ஹோட்டல்கள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன
பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் – தொழிலின்மை அதிகரித்துள்ளது.
நாட்டு மக்கள் தங்களுடைய நாளாந்த மூன்று வேளை உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் இரண்டு வேளை உணவு உண்ண வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அதற்கு பழகி கொள்ள வேண்டும் என கூற ஒரு பிரதமர் தேவையா?
ஆகவே, பிரதமர் அவர்கள் இந்த சபையில் முன்வைக்க எதிர்பார்த்துள்ள இடைக்கால குறை நிரப்பு பிரேரணை மூலமாவது மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்கப்பட வேண்டும்
முடியுமான அளவு அரிசி, கோதுமைமா, பருப்பு, போன்ற முக்கிய உணவு பொருட்கள் குறைந்த – நியாய விலையில் வழங்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் அல்லது விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.