2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு போதுமான எல்லா அதிகாரங்களையும் வழங்கியுள்ளனர்.
இனி தீர்வுகளை நாடி நிற்கும் இலங்கை மக்கள் அனைவருக்குமாக சேவையாற்ற வேண்டிய பணி அவர்களுக்கு உரியது. அதனைச் சரியாக நிறைவேற்றும் பொறுப்பும் அவர்களுக்கு உரியது. இந்த வரலாற்று வெற்றியைத் தமதாக்கிய வரலாற்றினைப் படைக்கவும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம் என மலையக அரசியல் அரங்கம் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் தொடர்பில் மலையக அரசியல் அரங்கம் விடுத்திருக்கும ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அடுத்தடுத்து நடைபெற்று முடிந்த இரண்டு தேர்தல்களிலும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அபார வெற்றிபெற்று ஆட்சி பீடம் ஏறியுள்ளார்கள்.
தேசிய மக்கள் சக்திக்கு அனைத்து அதிகாரங்களையும் மக்கள் வழங்கியுள்ளனர் இனி மக்கள் எதிர்பார்த்த தீர்வுகளையே வழங்கும் பொறுப்பே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளது.
மலையக அரசியல் நிலையில் தேசிய மக்கள் சக்தி சில முற்போக்கான அம்சங்களை இந்தத் தேர்தலில் பதிவு செய்துள்ளது. ஐந்து மலையகத் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தம்வசம் கொண்டுள்ளது. அதில் மூவர் பெண்களாக இருப்பது சிறப்பம்சமாகும். அதேபோல இரத்தினபுரி, மாத்தறை மாவட்டங்களில் இருந்து முதன் முறையாக மலையகத் தமிழர் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை வரலாற்றுச் சிறப்பாகும்.
ஆனாலும் இந்த ஐவரும் புதியவர்களாகவும் தேசிய மக்கள் சக்தியின்; தீவிர விசுவாசிகளாகவும் இருப்பதோடு ஆளும் கட்சி உறுப்பினர்களாகவும் இருப்பது மலையக அரசியல் அடையாளத்தையும் கருத்தியலையும் கொண்டு செல்வதில் பெரும் சவாலாகவே அமையும்.
மறுபக்கத்தில் இவர்களுக்கு எதிர்வரிசையில் அமர்ந்திருக்கப் போகும் மூன்று மலையகத் தொழிற்சங்க தலைவர்களும் தங்களது ஆசனங்களை பாதுகாத்துக் கொள்ளவே அடுத்த ஐந்தாண்டு காலத்தில் பதவியில் இருப்பர். தவிரவும் மலையக அரசியலை கருத்தியல் ரீதியாகக் கொண்டு செல்லவும் தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்ளும் சக்தி இவர்களிடத்தில் இல்லை என்பதையும் அடுத்து வரும் நாட்கள் உணர்த்தி நிற்கும்.
மலையகத் தமிழரின் தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்புகளோடு தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அந்த எதிர்பார்ப்புகளை அடைவதில் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் என்பது நிச்சயமான உண்மை. அத்தகைய சூழலில் மலையக அரசியல் கருத்தியலை முன்னிறுத்திச் செயற்படவும் மலையகத்துக்கு அவசியமான சமூக, பொருளாதார நிர்வாக, அரசியல் பகிர்வு கோரிக்கைகளை முன்னிறுத்திய கொள்கை வலியுறுத்தல்களை தொடர்ந்து முன்னெடுக்கவும் மலையக அரசியல் அரங்கம் தொடர்ந்து அரசியல் களத்தில் தனது பணியை ஆற்றிக்கொண்டே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MPA