தேசிய அரசு அல்லது சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில், அரசாங்கத்திடமிருந்து எமக்கு இதுவரை அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை. ஏனைய எதிர்கட்சிகளுக்கும் அதிகாரபூர்வ அழைப்புகள் வரவில்லை. ஆகவே அதற்குள் “பேச்சுகள் நடக்கின்றன; அமைச்சர்கள் ஆகிறார்கள்” என்பவையெல்லாம் வெறும் சுவாரசிய செய்திகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும், அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது எனவும், தமிழ் முற்போக்கு கூட்டணி நம்புகிறது என கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,
தேசிய அரசு அல்லது சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில் அதிகாரபூர்வ அழைப்பு வரவில்லை. ஆனால், கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடமும், ஏனைய கட்சி தலைவர்களிடமும் நேரடியாக இது பற்றி கூறினார். ஆனால், கட்சிகளுக்கு சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில், அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு வரவேண்டும்.
அதன் பிறகு நாம் எமது கட்சிகள் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழுக்கள் மத்தியில் இதுபற்றி பேசுவோம். அதேபோல் ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழுவிலும் பேசுவோம். இதுதான் ஒரு பொறுப்புள்ள நேர்மையுள்ள ஜனநாயக அரசியல் கட்சி செய்ய வேண்டிய முறைமை. அதை நாம் செய்வோம். எமது முடிவுகளை எமக்கு வாக்களித்து தெரிவு செய்துள்ள, எமது மக்களின் நலன்களை முன்னிட்டு, நாம் ஒற்றுமையாக எடுப்போம்.
அதேவேளை, நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும், அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணி திடமாக நம்புகிறது. அதுவே எங்கள் மக்களின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் நலன்களை சார்ந்து மாத்திரம் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் செய்யாது.
அரசில் சேருகிறோமோ, இல்லையோ, புதிய அரசியலமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சருடன் நாம், மலையக தமிழ் இலங்கையர்களின் அரசியல் அபிலாஷைகளை முன் வைப்போம். அடுத்து வரும் அரசியலமைப்பு திருத்தத்தில் எமது மக்களின் எதிர்பார்ப்புகளை இடம்பெறச்செய்ய எம்மால் ஆனதை நாம் பொறுப்புடன் செய்வோம்.