அரசியலில் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக மேடைகளில் ஒன்று சேர்கின்றார்கள்

0
211

மலையகத்தில் எத்தினை கூட்டணிகள் உருவாக்கினாலும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. அரசியல் செய்வதற்காக கூட்டணிகள் உருவாக்கப்படுகிறது தவிர மக்களுக்கு சேவை செய்வதற்காக கூட்டணிகள் உருவாக்கப்படுவதில்லை. என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் புதிய காரியாலயம் ஒன்று நுவரெலியா நகரில் இன்று திங்கட்கிழமை திறந்து வைத்த சதாசிவம் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய மலையக தலைமைகள் அரசியலில் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக மேடைகளில் ஒன்று சேருகின்றார்கள். தேர்தல் முடிந்தவுடன் பிரிந்து விடுகின்றார்கள். இது இவ்வாறிக்க மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகள் தேர்தல் காலங்களில் மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றார்கள் ஆனால், தலைமைகள் ஒன்றாகதான் இருக்கின்றார்கள்.

இன்று தொழிற்சங்க அனுபவம் இல்லாத தொழிற்சங்க தலைமைகளால் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாமல் இருக்கின்றது. தொழிலாளர்களை சரியான வழி நடத்தல் இல்லாத காரணத்தால் தொழிலாளர்கள் கம்பனிகாரர்களிடம் கொத்தடிமைகளாக வாழுகின்றார்கள். கடந்த காலங்களில் தோட்ட நிர்வாகங்கள் வழங்கிய சலுகைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை தட்டி கேட்பதற்கு அதிகாரத்திலுள்ள எந்தவொரு தொழிற்சங்க அரசியல் தலைமைகள் முன்வருவதில்லை. இன்று இந்த நாட்டில் டொலர் தட்டுப்பாட்டால் நாட்டில் பொருளாதாரம் சீரழிந்து போயுள்ள நிலையிலும் வெளிநாட்டு டொலரை பெற்று கொடுக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பற்றி அதிகாரத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பாமல் மௌனம் சாதிக்கின்றனர்.

இதற்க்கு காரணம் அனுபவமில்லாத தொழிற்சங்க தலைமைகள் பாராளுமன்றத்தில் இருப்பதாலே தொழிலாளர்களின் குறைகளை பாராளுமன்றத்தில் பேசமுடியாமல் இருக்கின்றனர். எனவே எதிர்வரும் காலங்களில் தொழிற்சங்க அனுபவமுள்ள
அரசியல் தலைமைகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூரளை எஸ்.ரமணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here