அரிசி விலை உயரும். அரிசி 500 ரூபாவாக அதிகரிக்கலாமென சிலர் வதந்திகளைப் பரப்புவதன் மூலம் மக்கள் அதிகளவு அரிசியை சேகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வாறு அரிசியை சேகரித்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த அரிசி பாவனைக்கு உதவாது. அதனை நுகர்வோர் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமென்று எவரும் பயப்படத் தேவையில்லை. போதியளவு அரிசி கையிருப்பு உள்ளதுடன் இந்த மாதத்தில் மேலும் 65,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை 39,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது நெல் சந்தைப்படுத்தும் சபையின் வசமுள்ள நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
குறைபாடு ஏற்பட்டால் மேலும் அரிசியை இறக்குமதி செய்ய முடியுமென தெரிவித்த அமைச்சர், அரிசி, பருப்பு,சீனி போன்ற பொருட்களை தேவைக்கு அதிகமாக சேமிக்க வேண்டிய அவசியம் கிடையாதென்றும் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபை மூலம் பெறப்படும் அரிசியையும் ச.தொ.ச மூலம் மக்களுக்கு 200 ரூபாவுக்கு குறைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.