ஆசிய கிண்ண போட்டிகளில் தொடர்கின்றது இலங்கையின் ஆதிக்கம்!
15 தொடர்களில் – 6 தடவைகள் வெற்றி மகுடம்! 6 தடவைகள் 2 ஆம் இடம்!!
ஆசிய கிண்ண போட்டிகளில் தொடர்கின்றது இலங்கையின் ஆதிக்கம் !
1984 இல்தான் முதலாவது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இலங்கை, இந்திய அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது.
1986 இல் நடைபெற்ற 2 ஆவது ஆசியக்கிண்ண தொடரில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று வெற்றி மகுடத்தை தனதாக்கிக்கொண்டது.
( 86 இல் இலங்கையில் ஐ.தே.க. ஆட்சி. ஜனாதிபதியாக ஜே.ஆர். பதவி வகித்தார்.)
1997 இல் நடைபெற்ற 6 ஆவது ஆசியக்கிண்ண போட்டியில், இறுதிச்சமரில் இலங்கை, இந்திய அணிகள் களம் கண்டன. இதில் 5 விக்கெட்டுகளால் இலங்கை அணி வெற்றிபெற்று, சாம்பியன் ஆனது.
( 97 மக்கள் கூட்டணி ஆட்சி. ஜனாதிபதியாக சந்திரிக்கா அம்மையார் செயற்பட்டார்.)
2004 இல் நடைபெற்ற 8 ஆவது ஆசியக்கிண்ண தொடரிலும் இலங்கை , இந்திய அணிகளே இறுதிப்போட்டிக்கு தெரிவாகின. இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றிநடை போட்டது.
(2004 இல் சந்திரிக்கா ஆட்சி)
2008 இல் நடைபெற்ற 9 ஆவது ஆசியக்கிண்ண தொடரின்போதும் இலங்கை, இந்திய அணிகளே இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இலங்கை அணி 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. ஆசியக்கிண்ண தொடரில் இறுதி போட்டியொன்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் அணியொன்று பெற்ற வெற்றி. அந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
( 2008 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி. ஜனாதிபதி மஹிந்த)
2014 இல் நடைபெற்ற 12 ஆவது ஆசியக்கிண்ண போட்டியில் இறுதி ஆட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் களம் கண்டன. இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, வெற்றிக் கிண்ணத்தை முத்தமிட்டது.
(2014 இல் மஹிந்த ஆட்சி)
15 ஆவது ஆசியக்கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்று வெற்றி மகுடத்தை தனதாக்கியது.
( ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஐ.தே.க. ஆட்சி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.)
இந்திய அணி 7 தடவைகள் கிண்ணம் வென்றிருந்தாலும், மூன்று தடவைகள் மாத்திரமே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
( ஆசியக்கிண்ண தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர். இன்று ஜனாதிபதி. 86 இற்கு பிறகு இலங்கை கிண்ணம் வெல்லும் தருணங்களில் அவரே ஐ.தே.க. தலைவராக நீடிக்கின்றார்)
ஆர்.சனத்