சுதந்திரத்திற்குப் பின் இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அத்தனை பேரும் இனவாத சிந்தனையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியாதவர்களாக, தமிழ்பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை தொடர்ச்சியாக புறக்கணித்த காரணத்தினால் தமிழர்களின் அகிம்சை போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தததாக ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத் தொடர் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-
போராட்டத்தை அடக்கப் போவதாகக் கூறிக் கொண்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தை தமிழ்மக்கள் மீது பிரயோகித்து, ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பழியெடுத்தும், காணமல் போகச் செய்தும், வெற்றிக் கொண்டாட்டம் நடாத்திய போது, உலகம் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும், மனிதபடுகொலைக்கும் எதிராக இலங்கைமீதான கண்டனத்தை தெரிவிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் இலங்கை அரசாங்கம் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான குறைந்தபட்ச நடவடிக்கை எதுவும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அனைத்து நெருக்கடிகளுக்கும் பிரதான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது இனப்பிரச்சினை ஆகும்
ஆகவே கடந்த கால அனுபவங்களை பாடமாக கொண்டு 52 ஆவது மனிதவுரிமை கூட்டத்தொடருக்கு முன்பாகவேனும் இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும். இல்லாவிட்டால், நாடு இன்று எதிர்நோக்கியுள்ள நெருக்கடியிருந்து மீள்வதென்பது பகற்கனவாகவேயிருக்கும்.
இந்நிலையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனிதவுரிமை போன்ற விடயங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றமை இலங்கை மீதான சர்வதேசத்தின் நம்பிக்கையை இழக்கச் செய்வதோடு, இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படவுள்ள பிரேரனை நாட்டை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கிவிடுமோ என்ற அச்சம் மேலெழுந்துள்ள நிலையில் சர்வதேசத்தையும் நாட்டு மக்களையும் ஏமாற்றாத வகையில் அரசாங்கம் தீர்க்கமான முடிவொன்றுக்கு வரவேண்டிய கட்டாயத்திலுள்ளது.
மேலும் 2009 ஆண்டு 30 வருட தமிழர் விடுதலை போராட்டம் மெளனிக்க செய்யப்பட்டதன் பின் உறவுகளையும், உடைமைகளையும் இழந்த எஞ்சிய தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கை சர்வதேசம் மட்டுமாகவே இருந்தது. ஆனால் யுத்தம் நிறைவடைந்து சுமார் 13 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இன்னும் தமக்கான நீதியை சர்வதேசத்தால் பெற்றுக் கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை சர்வதேச சமூகம் புரிந்துக்கொள்ளவேண்டும்.
தமிழ் அரசியல் தலைமைகள் தங்களின் அரசியல் பிழைப்புக்காகவோ, வாக்கு வங்கியை தங்கவைத்துக் கொள்வதற்கான மார்க்கவோ எமது மக்களின் பிரச்சினைகளை கையாளாமல் தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு அனைவரும் கைகோர்த்து, அர்ப்பணிப்புடன் செயற்படமுன்வரவேண்டும்.
ஆகவே இனியும் காலம் தாழ்த்தாது காணமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், அரசியல் கைதிகளை விடுப்பதற்கும், தமிழ்பேசும் மக்களுக்கு பொருத்தமான அதிகார பகிர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கும், இந்தநாட்டில் இருநூறு வருட வரலாற்றை கொண்ட மலையக மக்களின் பதிவு பிரசை முறை நீக்கப்பட்டு, பொது பிரகடனத்தின் மூலம் இந்நாட்டின் பிரஜையாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வென்றெடுப்பதற்கும்
இதன் அடிப்படையில் மலையக தமிழர்களுக்கு காணிவுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தவும், ஜனநாயக போராட்டங்களில் பங்கு கொண்டவர்களை விடுவிப்பதற்கும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும், நாட்டுக்கு ஏற்ற புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கிக் கொள்வதற்கும், நாட்டின் மீதும், மக்கள் மீதும் அக்கறையுள்ள அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுத்து, எதிர்காலம் தொடர்பான அச்சத்தை போக்குவதற்காக ஐ. நா. மனிதவுரிமை பேரவையின் 51வது கூட்டத்தொடர் காலத்தை அரசியல் மற்றும் சமூகத்தலைமைகள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்