ஆர்ப்பாட்டக்காரர்களின் தேவைகளை அரசாங்க அனுசரணையுடன் முன்னெடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தை உட்பட சில இடங்களை ஒதுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
பெரும்பான்மையான போராட்டக்காரர்களின் தலையீட்டில் இதற்கான முறையான யோசனையை தயாரிக்குமாறு ஜனாதிபதி, அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நூலகங்கள், அரசியல் கற்கைகளுக்கான வசதிகள், இசை, கலை, மேடை நாடகங்கள் மற்றும் இளைஞர்களின் திறமைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் மையமாக இந்த இடத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.
இச்செயற்பாட்டிற்காக அனைத்து போராட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு கூறியுள்ள ஜனாதிபதி, அக்குழுவிற்கு அனைத்து மதங்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவமும் இன்றியமையாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான போராட்டக்காரர்கள் மத்தியில் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள் இருப்பதாகவும், அவர்களைப் போற்றுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, போராட்டம் வன்முறையாக மாறக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.