கதிர்காமத்திற்கான காட்டுப் பாதை எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்கப்படும். அதனைத் திறந்து வைக்க கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வருகைதரவிருக்கிறார் இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தன்னைச் சந்தித்த ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினரிடம் தெரிவித்தார்.
இச் சந்திப்பு (18) செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் மு.வடிவேல் செயலாளர் எஸா.செல்வானந்தன் பொருளாளர் இ.ஜெகநாதன்( குமார்) உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதன் போது குழுவினர் பத்து நாட்களுக்கு முன்னரே அதாவது 25 ஆம் தேதி காட்டுப் பாதை திறக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலளித்த அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம மேற்படி 30 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் ஆளுநர் வருகை தருவார் என்றும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜனையும் குழுவினர் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதேவேளை கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மாற்றம் ஏற்பட்டமையை கண்டித்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக நேற்று (18) காலை 10.45 மணியளவில் கவனயீர்ப்பு செயற்பாட்டை மேற்கொண்டிருந்தனர். மேலும் அதனை தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தங்கள் கோரிக்கை மகஜர் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
( வி.ரி.சகாதேவராஜா)

