இனத்தின், சமூகத்தின், நாட்டின் பொது பிரச்சினைகள், சவால்கள், இலக்குகள் தொடர்பில் மாறுபட்ட கட்சி தலைவர்கள் ஒன்றாக அமர்வது, பேச்சுகளை நடத்துவது, முற்போக்கான கலாச்சாரம். இதுதான் பொது நோக்கில் இணைந்து செயற்படுவது என்பதாகும்.
“இணைந்து செயற்படுவது” என்பது எப்போதும் “தேர்தலை இலக்கு வைத்த செயற்பாடு” என்பது மட்டும்தான் என்ற சம்பிரதாயத்தில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். பொது விடயங்களில் ஒன்று சேர வேண்டும் என்ற விடயத்தில், சிங்கள அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், சிங்கள மக்கள், தமிழ் பேசும் அரசியல்வாதிகளை விட, தமிழ், முஸ்லிம் கட்சிகளைவிட கணிசமாக முற்போக்காக இருக்கிறார்கள்.
நாமும் அந்த முற்போக்கான கலாச்சாரத்தை உள்வாங்க வேண்டும். நமது கட்சிகளுக்கு வெளியே பெரும்பான்மை அரசியல்வாதிகளுடனும் பொது விடயங்களில் ஒன்றாய் அமர்ந்து உரையாட நாம் தயங்குவதில்லை.
தீபாவளி தினத்தில் காலையில் எதிரணி தலைவருடனும், மாலையில் நாட்டின் ஜனாதிபதியுடனும் அமர்ந்து நமது மக்களின் விவகாரங்களை உரையாட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருக்கு முடிகின்றது என்றால் அது கூட்டணிக்கு உரிய அங்கீகாரத்தையே காட்டுகிறது என தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
இதுபற்றி மனோ எம்.பி மேலும் கூறியதாவது,
எல்லா கூட்டு அமர்வுகளும் தேர்தல் கூட்டுகள் என்றும், எல்லா சந்திப்புகளும் அமைச்சரவையில் இடம் பிடிக்க என்றும், எடுத்த எடுப்பிலேயே முடிவு செய்து ஆரம்பிக்க கூடாது.
அப்படி ஆரம்பித்தால், ஆரம்பித்த வேகத்திலேயே அவை முடிவுக்கு வந்து விடும். தேர்தல்கள் குறிப்பிட்ட வேளைகளில் நடைபெறும். தேர்தல் இல்லாத பணியாற்ற வேண்டிய காலங்களே அதிகம்.
ஆகவே தேர்தல்களுக்கு அப்பால், நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் பொது பிரச்சினைகள் தொடர்பில் மாற்று கட்சியினருடன், குறைந்தபட்ச பொது வேலைதிட்டம் என்ற அடிப்படையில் பல்குழல் ஏறிகணைகளாக செயற்பட வேண்டும்.
தமிழ் முற்போக்கு கூட்டணி இப்போது, ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் ஒரு பிரதான பங்காளி கட்சி. ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் வேறு தமிழ் கட்சிகளை உள்வாங்குவது, மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி, தேர்தல் நோக்குகளில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் கூட்டு சேருவது, தேர்தல் கூட்டணிகள் அமைப்பது என்பவற்றை தேர்தல் வரும் போது நிச்சயமாக பேசலாம். நமது மக்களின் பிரதிநிதித்துவங்களை அதிகரிக்கலாம்.
இன்று தேர்தல் கூட்டணி பற்றி, இ.தொ.கா.வுடன் நாம் பேசவில்லை. அதேவேளை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் ஒரு கூட்டணிக்குள் வரவேண்டும் என்று எவரும் எமக்கு அழுத்தம் தரவும் இல்லை.
ஏற்கனவே தமிழ் முற்போக்கு கூட்டணி தயாரித்துள்ள, மலையக தமிழர் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம் இதொகாவிடம் தரப்பட்டுள்ளது. அந்த ஆவணம் மூலம் நமது மக்கள் இந்நாட்டின் முழுமையான குடிமக்களாக ஏற்கப்பட வேண்டும் என்பதை நாம் தர்க்கரீதியாக கோரியுள்ளோம்.
தேசிய அரசியல் அபிலாஷை ஆவணத்தை ஏற்றுக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவிக்கும், எல்லா கட்சிகளுடனும் சேர்ந்து, அதை பொது ஆவணமாக கொண்டு, அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு தரப்பினரிடமும் நாம் கூட்டாக எடுத்து சென்று கலந்துரையாடலாம்.
இதுவே இன்றைய காலத்தில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி என நான் நம்புகிறேன்.