ஆகஸ்ட் 15, 2022 அன்று, இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாட வுள்ளது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், இந்திய அரசாங்கம் ‘ஆசாதி கா அம்ரித் மோகத்சவ்’ கீழ், ‘தேசம் முதன்மை, எப்போதும் முதன்மை’’ என்ற கருப்பொருளில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் 200 மில்லியன் மூவர்ணக் கொடிகளை ஏற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் அனைத்து இந்தியர்களுக்கும் சிறப்பு வாய்ந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதன்முறையாக செங்கோட்டையில் இருந்து மக்களிடம் உரையாற்றினார். இந்தப் பாரம்பரியம் இன்றுவரை தொடர்கிறது. இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
இந்திய சுதந்திர தின வரலாறு
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு ஆதிக்க அந்தஸ்து வழங்க விரும்பினர். முகமது அலி ஜின்னா, ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி மற்றும் தேஜ் பகதூர் சப்ரு ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இந்தியர்கள் குழு முழுமையான சுதந்திரத்தை விரும்பினர்.
1929 ஆம் ஆண்டு இர்வின் பிரபுவுக்கும் இந்தியப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் ஆண்டுதோறும் தன் பொதுக்கூட்டத்தை டிசம்பர் மாதம் நடத்தும். அது போல் அந்த ஆண்டு நடைபெற்ற லாகூர் அமர்வில் முந்தைய ஆதிக்க நிலையிலிருந்து விலகி, முழு சுதந்திரத்திற்கான ‘பூர்ண ஸ்வராஜ்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேரு, டிசம்பர் 29, 1929 அன்று லாகூரில் உள்ள ராவி நதிக்கரையில் தேசியக் கொடியை ஏற்றினார். “காங்கிரஸ் நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஒரு பெரிய படியை முன்னெடுத்துச் செல்லப் போகிறது,” என்று அவர் கூறினார். ஜனவரி 26, 1930 அன்று பாரத தேசத்தின் முதல் ‘சுதந்திர தினமாகவும்’ தேர்வு செய்துஅறிவித்தனர்.
அப்போதிருந்து, 1947 வரை, ஜனவரி 26 ஐ இந்தியா சுதந்திர தினமாகக் கொண்டாடியது. 1950 ஆம் ஆண்டில், இந்தியா அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு குடியரசாக மாறியதும் இதே தேதியில் தான். இந்தத் தேதியைத்தான் இன்று குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.
ஆகஸ்ட் 15 இந்தியாவின் சுதந்திர தினமாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு, இந்தியர்கள் ஆங்கிலேயர்களை நாட்டைக் கைவிடும்படி கட்டாயப்படுத்தினர். ஜூன் 30, 1948க்குள் அதிகாரத்தை இந்தியாவுக்கு மாற்ற இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஆணையை வழங்கியது.
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் எதிர்த்தனர். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மவுண்ட்பேட்டன் ஆகஸ்ட் 15 ஐ இந்திய சுதந்திர நாளாகத் தேர்ந்தெடுத்தார். ஃப்ரீடம் அட் மிட்நைட் எனும் புத்தகத்தில் இதை மேற்கோளாகக் காட்டியிருப்பார்.