ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த வாரம் கட்சித் தாவல்கள் நிறைந்த வாரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான பேரங்கள் திரைமறைவில் இடம்பெற்றுவருவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருக்கும் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கட்சித் தாவவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இதுவரை காலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துவந்த சிலர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சி பக்கம் தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களிடையே சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த சிலரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஏற்கனவே ஜனாதிபதிக்கு ஆதரவாக சென்ற பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் நாமல் ரஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் கட்சித் தலைமையகம் செல்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த வாரத்தில் நாடாளுமன்ற அமர்வு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அதன்போது சிலர் தமது நிலைப்பாடுகளை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதுடன் அடுத்துவரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் ஆசனங்கள் இடமாற்றப்படலாம் என்றும் கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.