பாராளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் எனவும் டிசம்பர் மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் எமது ஆங்கில இணையத்தயளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. .
பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன நேற்று இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று அவர் உட்பட நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வட்டாரங்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கான பதவிகளை வைத்திருப்பார் எனவும் அத்தோடு பிரதமர் வெளியுறவு, கல்வி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக இருப்பார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதுடன், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர் தலா பல அமைச்சுகளுடன் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.