உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.
உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உணவு தொடர்பான பிரச்னையில் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் வறுமையை ஒழிப்பதும் இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. உணவில் மாவு, புரதம், தாது, கொழுப்பு, உயிர் சத்து (விட்டமின்) போன்றவை கலந்து இருப்பதே சரிவிகித உணவாகும். உயிர் சத்தும் தாது உப்புகளும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலக வங்கி தகவல்படி 2010& 11ம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சுமார் 7 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசி காரணமாக உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு போன்றவை, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்றன. ஏழைகளுக்கு 3 வேளை உணவு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. எனவே சமச்சீரான வளர்ச்சியை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். எதிர் காலங்களில் பட்டினியால் சாவு என்பதை தவிர்க்க உறுதிமொழி ஏற்க வேண்டும்.
உலகளவில் அதிக உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும் சர்வதேச உணவு விருது 1986 முதல் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, நார்மன் போர்லாக் என்ற அமெரிக்கரின் முயற்சியால் இவ்விருது உருவாக்கப்பட்டது. இந்த விருது பெறுபவருக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இதுவரை எம்.எஸ். சுவாமிநாதன், வர்கீஸ் குரியன் உள்ளிட்ட 6 பேர் இவ்விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.