உடரதல்ல தோட்ட தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை இ.தொ.கா (30) இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரும்,இ.தொ.கா பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டம் நானு ஓயா உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான செயற்பாட்டை கண்டித்து கடந்த ஒருமாத காலமாக பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேநேரத்தில் உடரதல்ல தோட்டத் தொழிலாளர்களுக்கும் அத் தோட்ட நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்சினை தொழிற்சங்க பிரச்சினையாகும்.
இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள தொழிற் சங்கம்,
தோட்ட நிர்வாகம் மற்றும் தொழில் திணைக்களம் இணைந்து தீர்வுகளை பெறவேண்டும் மாறாக தொழிலாளர்களுக்கு எதிராக
தொழிற்சங்க பிரச்சினையில் பொலிஸார் தலையிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
உடரதல்ல தோட்டத்தில் இலக்கம் (05) தேயிலை மலையில் தேயிலையை அகற்றி அங்கு கோப்பி பயிரிட கலனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் உடரதல்ல தோட்ட நிர்வாகம் தான்தோன்றி தனத்தை கையாண்டுள்ளது.
அதேநேரத்தில் தோட்ட நிர்வாகத்தின் இந்த தான்தோன்றி தனமான செயற்பாடு உடரதல்ல தோட்ட தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கையை கேள்விகுறியாக்கிவிடும்.
இந்த நிலையில் அத் தோட்ட தொழிலாளர்கள் “தேயிலையை அழிக்காதே கோப்பியை பயிரிடாதே” என்று தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டை கண்டித்து தொழில் பகிஷ்கரிப்பில் கடந்த ஒரு மாதமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தோட்ட நிர்வாகம் தேயிலையை பிடுங்க தோட்டத்திற்குள் இயந்திரத்தை கொண்டு வந்த நிலையில் அதை தடுத்து நிறுத்திய தோட்ட தொழிற்சங்க தலைவர் உள்ளிட்ட மூவர் மீது தோட்ட நிர்வாக அதிகாரி பொலிஸ் முறைப்பாடு செய்து தொழிற் பிரச்சினையை பொலிஸ் பிரச்சினையாக மாற்றியுள்ளார்.
இதை தொடர்ந்து குறித்த தோட்ட தலைவர் மற்றும் மேலும் இருவருக்கு தொழில் நீக்கம் செய்துள்ளார்.இந்த நிலையில் தொழில் நீக்கம் செய்தவர்களுக்கு தொழில் வழங்க வேண்டும்,கோப்பி பயிரிடுவதை நிறுத்த வேண்டும் என தொழிலாளர்கள் தொழிற்சங்க பேதமின்றி தீர்வு கிடைக்கும் வரை பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த ஒருமாத காலத்தை தொட்ட பணி பகிஷ்கரிப்பிற்கு தீர்வு பெறும் வகையில் நுவரெலியா உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் தொழிற்சங்கம் மற்றும் தோட்ட நிர்வாகத்திற்கு இடையில் பேச்சுவார்த்தை (30) காலை உதவி தொழில் ஆணையாளர் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்த பேச்சு வார்த்தையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தொழிற்சங்க சார்பாக கலந்து கொண்டார். இருப்பினும் இப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இரு தரப்பினரிடத்திலும் இணக்கப்பாடு எட்டவில்லை என்பதால் அமைச்சர் வெளிநடப்பு செய்தார்.
அதேநேரத்தில் தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகம் தொழிற்சங்க பிரச்சினைக்கு பொலிஸ் நடவடிக்கை எடுத்தது தவறு என சுட்டிக்காட்டி நுவரெலியா பொலிஸ் நிலைய தலமையக பொறுப்பதிகாரி காரியாலயத்திற்கு சென்ற அமைச்சர் தொழிற்சங்க நடவடிக்கையில் பொலிஸார் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என பொலிஸ் அதிகாரியிடம் தெரிவித்தார்.
அத்துடன் தொழிற்சங்க நடவடிக்கையில் பொலிஸார் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான முன்னாள் பிரதி பொலிஸ் அதிபருடன் கலந்துரையாடி தீர்வு எட்டப்பட்ட விடயத்தையும் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய அமைச்சர் ஜீவன் உடரதல்ல தோட்ட தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு இ.தொ.கா தீர்வை
பெற்று தரும் என தெரிவித்தார்.
அதேசந்தர்ப்பத்தில் உடரதல்ல தோட்ட தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை இ.தொ.கா (30) இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும் இதற்கென கலனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவத்திற்கு கீழ் இயங்கும் மலையகத்தின் அனைத்து தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணியாற்றுவர் ஆனால் தேயிலை தூளை தொழிற்சாலையிலிருந்து கொண்டு செல்வதை நிறுத்துவார்கள் என்ற தொழிற்சங்க நடவடிக்கையை தொடரவுள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
CWC MEDIA UNIT