கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இவ்வாரம் (ஜூன் 20 – 24) மூட தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் பிரதான நகரங்கள் அல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் உரிய தீர்மானத்தை எடுக்க, மேல் மாகாணம் உள்ளிட்ட அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுடன் இணையவழியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் வெள்ளிக்கிழமை (24) வரையான வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை பின்வருமாறு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்களை பாதிக்காத வகையில், பிரதேச மட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை நடாத்துவதற்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏதேனுமொரு பாடசாலைக்கு செல்ல முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் பாடசாலையை நடாத்த முடியுமானால், வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை நடாத்தப்பட்ட போதிலும், ஒரு குறிப்பிட்ட மாணவர்களால் அதில் பங்கேற்க முடியாமல் போனால், அந்த மாணவர்களுக்கு ஒன்லைன் மூலம் கற்பிக்கும் வசதிகள் இருந்தால் அந்த முறையைப் பயன்படுத்த முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.