இயக்குனர் சங்கருக்கு கௌரவ கலாநிதி பட்டம் – நாளை பிரமாண்டமான விழா

0
330

தமிழகத்தின் புகழ் பெற்ற தனியார் பல்கலைக் கழகமான வேல்ஸ் பல்கலைக்கழகம்  தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் இயக்குநர் ஷங்கருக்கு கெளரவ டாக்டர்  பட்டம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

பல்லாவரத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நாளை 5ஆம் திகதி இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

“சினிமா என்பது பல கலைத் துறைகளின் சங்கமம். தொடர்பில்லாத துறைகளில் இருந்து பல திறமையானவர்களை ஒன்றிணைத்து அடையாளம் காட்டும் தொடர்பு சாதனம். இப்படிப்பட்ட துறைக்கு பிரமாண்டத்தின் மூத்தப் பிள்ளையாக இருக்கும் மக்கள் போற்றும் ஒரு கலைஞனைத்தான் இன்று நாம் போற்றுகிறோம் என இது குறித்து வேல்ஸ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கும்பகோணத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இயக்குநர் ஷங்கர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார். அவரது கல்லூரி நாட்களிலேயே நாடகங்களுக்கு கதை எழுதத் தொடங்கினார்.

பின்னர், அவர் ஒரு அமெச்சூர் நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கு அவர் ஐந்து ஆண்டுகள் நன்கு பயிற்சி பெற்றார். இவரின் திறமை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது. அவர் ஷங்கரை தன் உதவியாளராக அழைத்துக் கொண்டார்.

1986 – 87ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தன்னுடைய சொந்த முயற்சியில் சிறு, சிறு விளம்பரப் படங்களை எடுத்து திரை இயக்குநரானார், 1993இல் வெளியான ‘ஜென்டில்மேன்’, என்ற திரைப்படம் இயக்குநர் ஷங்கர் என்ற ஜாம்பவானை தமிழ்த் திரையுலகத்திற்கு வெளிப்படுத்தியது. இதன் பின்னர் பல படங்கள் இவருக்கு புகழை தட்டிக்கொடுத்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளைய தளபதி விஜய் என இன்றைய திரை உலகின் சூப்பர் ஸ்டார்களை நடிக்க வைத்து அதில் வெற்றிமேல் வெற்றி சூடியவர் இயக்குநர் ஷங்கர்.

இவரது படங்கள் பிலிம்பேர் விருதுகள், மாநில விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் என அனைத்துத் தரப்புகளிலும் விருதுகளை வென்றுள்ளன.

தயாரிப்பாளராகயும் பரிமாணங்களைப் பெற்ற இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறது…” என்று குறிப்பிட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here