ராமர் சீதையின் காதல் கதையை புகைப்படம் பிடிப்பதற்கு என்ன காரணம்?
ராமர் சீதை கதை என்பது பல படலங்களில் காணப்படுகின்றன. அதில் எல்லாமே பல்வேறு நுணுக்கங்களை கொண்டு அமையப் பெற்றுள்ளன. பல்வேறு கதாபாத்திரங்கள் இதில் கடந்து செல்கிறது. குறிப்பாக என்னுடைய திட்டமிடல் ராமர் மற்றும் சீதை ஆகிய இரு கதாபாத்திரங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஒரு சிறிய பகுதியை புகைப்படங்கள் வாயிலாக வெளிக்காட்ட வேண்டும் என்பதாகும். அதனால்தான் வனவாசப் பகுதியை தெரிவு செய்துக் கொண்டேன். அதில் உள்ள காலம் கடந்த ராமர் சீதையின் தெய்வீக காதலை அடிப்படை அம்சமாக மேற்கொண்டேன்.
ராமர் சீதையின் புகைப்படத் தொகுப்பு கதை பயணத்தின் அனுபவம் என்ன?
இந்த தொடரில் எனக்கு கிடைத்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதனால் தான் இந்த பதிவு இவ்வளவு அழகாக வந்துள்ளது.
ராமர் சீதை புகைப்படக் கதையின் அனுபவம் எனும்போது ஒரு விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள், காட்சிகள், சம்பவங்களை வெளிக்காட்ட முதலில் நாம் அது தொடர்பாக கற்க வேண்டும். நான் சில நூல்கள், காணொளிகள் போன்றவற்றை பார்த்து எவ்வாறு இதனை செய்யலாம் என்று திட்டமிட்டுக் கொண்டேன். இத்திட்டம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது. அத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய நல்ல குழு அங்கத்தவர்களும் இதில் காணப்படுகின்றனர். சிறந்த குழு முயற்சியே சிறந்த வெற்றிக்குக் காரணமாக அமையும். இந்த தொகுப்பிற்கு பொர்த்தமாக ஒவ்வொருவரையும் தெரிவு செய்துக் கொண்டேன். ஒவ்வொரு விடயங்களும், ஒவ்வொரு புகைப்படமும் எனக்கு ஒவ்வொரு அனுபவத்தை தந்தது என்று சொன்னால் மிகை ஆகாது.
இதில் பங்கு கொண்டவர் யார் ? சிறிய விளக்கம் தாருங்கள்
புகைப்படம் எடுத்தல் மற்றும் படைப்பாற்றல் குழு பற்றி கட்டாயம் கூற வேண்டும்.
வீடியோ வடிவமைப்பு: சங்கர்.
கலைப்படைப்பு: ரூபன்
கதையாசிரியர்: கனகராஜ் சுபா
உதவி அழகுக் கலை நிபுணர்: ஷிரோமி.
அபிஷேக் இசையமைத்த போர்ட்ஃபோலியோ இசை காட்சியமைப்பை நிறைவு செய்கிறது.
உண்மையில் ராம் சீதா என்பது தரமான ஸ்கிரிப்ட் இதனை யார் முடிவு செய்தது ?
நான் தான் பல நாட்கள் யோசித்து தேர்ந்தெடுத்தேன். ஆனால் என்னுடைய ஸ்கிரிப்டே மிகவும் தரமானது என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு நல்ல படைப்பாளிக்கும், பார்வையாளனுக்கும் இடைப்பட்ட படமாகத்தான் இது இருக்கிறது. அதாவது பார்வையாளனை வசப்படுத்தும் ஒரு நல்ல கதை என்றும் சொல்லலாம்.
உதாரணமாக ஆயிரம் வரிகள் உணர்த்த வருவதை ஒரே ஒரு புகைப்படம் ஆழமாய் மனதில் பதித்துவிடும் என்று சொன்னால் அது மிகையாகாது.
உங்களுக்கு திரைப்படத்துறை ஆர்வரம் , அனுபவம் குறித்து எதிர்கால திட்டம் குறித்தும் பகிர்ந்துக்கொள்ள முடியுமா?
திரைப்பட ஆர்வம் நிச்சயமாக உண்டு. புகைப்படங்களை விட மிகவும் கடினமான ஒன்று திரைப்பட துறை. இதில் அனுபவம் இல்லை. ஆனால் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் அதனையும் சிறப்பாக செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எதிர்காலத்தில் இதற்கான முயற்சிகளையும் நிச்சயம் மேற்கொள்வேன்.
இராமயணம் போலவே பல்வேறு இதிகாசங்கள், கலைப்படைப்புக்கள் , பலதரப்பட்ட வாழ்வியல் மரபுகள் இன்று எம்மில் பலருக்கு தெரியாமலேயே உள்ளன. முடிந்த வரையில் அவற்றில் சிறுசிறு விடயங்களையாவது புகைப்படங்கள் வாயிலாக வெளிக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் நிறைந்துள்ளது. ஹெவன் ஸ்டுடியோவின் அடுத்த படைப்பாக நீரை அடிப்படையாகக் கொண்டு ‘கங்கா’ எனும் புகைப்பட பதிவை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
புகைப்படம் எடுப்பவர்களுக்கு எவ்வாறான தகுதி இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?
புகைப்படம் எடுப்பவர்களுக்கு தனிப்பட்ட தகுதிகள் இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. கலையின் அறிவும் ஆர்வமும் அவசியம். பார்க்கும் விடயங்களில் பலதரப்பட்ட சிந்தனை துளிகள், வேறுபட்ட புலக்காட்சி, வேறுபட்ட கருத்து போன்றன ஆளுக்காள் வேறுபட்டது. அவசியம் எனும் போது பொறுமையை தான் கூறமுடியும். அது இத்துறைக்கு மிகவும் அவசியம் என நான் கருதுகிறேன்.
புகைப்படத்துறையில் உங்களது பிரவேசத்திதன் போதான நிலைமை அதன் தற்போதைய நிலைகுறித்து கூற விளைவது?
ஆரம்பத்தில் புகைப்படங்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்படவில்லை என்றே கூறலாம். முடிந்தவர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொள்வர். குறைந்த அளவில்தான் ஸ்டுடியோக்களும் காணப்பட்டன. ஆனால் தற்போது பாரிய அளவில் புகைப்படத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது என்றே சொல்லலாம். காரணம் அதிகளவில் ஸ்டுடியோக்கள் காணப்படுகின்றன. கட்டணங்களும் அதிகரித்துள்ளன. அத்துடன் சில நிகழ்வுகளையும் புகைப்பட பதிவுகளாக எடுத்துக்கொள்ள அனைவரும் விரும்புகின்றனர். அத்துடன் பல்வேறு நுட்பமுறைகளும், கருவிகளும் இன்று காணப்படுகின்றன. மேலும் வளர்ச்சி அடைந்த வண்ணம் தான் இப்போது காணப்படுகிறது.
புகைப்படத்துறைக்கு புதிதாக வருபவர்கள் வெறுமனே கற்றவற்றை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதைவிட புதிதாக தங்களது திறமைகளை புகைப்படங்கள் வாயிலாக வெளிக்காட்ட வேண்டும் என்று நினைக்க வேண்டும். மற்றவர்களை போல் தானும் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று எண்ணுவதை விட சமூகம் சார்ந்த பல்வேறு அம்சங்களையும் வெளிக்காட்ட முயற்சிக்க வேண்டும். வாய்ப்புகளை தேடுவதை விட நாமே உருவாகாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
குறிப்பாக எத்தனையோ கருவிகளும், கலைஞர்களும் வந்தாலும் மனதோடு ஒன்றி, தனித்தன்மையை இழக்காமல், உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நோக்கில் ஒரு புகைப்படம் இருக்க வேண்டும் என்பதை இனிவரும் கலைஞர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
தேடல் உள்ளவரை படைப்பாற்றலில் சிறந்து விளங்க இடமுண்டு. அதற்காக அடுத்தவர் பாணியைப் பின்பற்றாமல், தமக்கென ஓர் தனிப் பாணியைப் பின்பற்றுதல் நல்லது.
உரையாடல் – செ.திவாகரன்