மெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டனில் இருந்து கொலம்பஸ், ஓஹியோவிற்கு ஒரு விமானம் 37,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த 34 வயதான எலோம் அக்பெக்னினோ என்ற பெண்மணி, விமானத்தின் பின்புறத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர் வெளியேறும் கதவை முறைத்துப் பார்த்துள்ளார். ஒரு விமானப் பணிப்பெண் விரைவில் அந்த இடத்திற்கு வந்து, அந்த பெண்மணியை இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார்.
ஆனால், அந்த பெண்மணி அங்கேயே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரண்டாவது விமானப் பணிப்பெண் அங்கு வந்தபோது, ஜன்னலுக்கு வெளியே பார்க்க முடியுமா என்று அக்பெக்னினோ கேட்டுள்ளார்.
ஆனால் விமானப் பணிப்பெண்கள் மறுத்தும், அவசரகாலத்தில் வெளியேறும் கதவின் கைப்பிடியை இழுக்க ஆரம்பித்துள்ளார். இதை தடுக்க வந்த சகபயணி ஒருவரை தொடையில் கடித்து வைத்துள்ளார்.
பின்னர் அவர் விமானத்தின் தரையில் அமர்ந்து தனது தலையை அடிக்கத் தொடங்கினார். இதையடுத்து லிட்டில் ராக்கில் உள்ள பில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தேசிய விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பொலிஸார் அந்த பெண்மணியை கைது செய்தனர். அந்த பெண் தனது கணவருக்கு தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், மேரிலாந்தில் உள்ள ஒரு குடும்ப நண்பரை சந்திக்க விரும்புவதாகவும் பொலிஸாரிடம் கூறினார்.
அதையடுத்து ஆர்கன்சாஸின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்தது. இதன்போது “இயேசு என்னை ஓகியோவிற்கு பறக்க சொன்னார். இயேசு தான் விமானத்தின் கதவைத் திறக்கச் சொன்னார்” என்று அந்த பெண் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.