இலங்கையின் எட்டாவது செயலதிகாரம் மிகு ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இன்று புதன்கிழமை பாராளுமன்றம் கூடவுள்ளது.
ஏழாவது செயலதிகாரம் மிகு ஜனாதிபதியாகப் பதவியை வகித்த கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகியதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு அவர் முழு நாட்டு மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட 5 வருட காலத்தின் எஞ்சிய இரண்டரை வருட காலப் பகுதிக்கான ஜனாபதியைத் தெரிவு செய்வதற்காக, பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அரசியல் யாப்பின் 40 (1) சரத்துப்படி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும். பதவியிலுள்ள ஜனாதிபதி மரணித்து அல்லது பதவி விலகி ஒரு மாத காலத்துக்குள் இயன்றளவு விரைவில் இத்தேர்தல் நடாத்தப்பட வேண்டும். இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்குப் பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் இரகசிய வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி தெரிவு இடம்பெற வேண்டும். புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் வரை பதில் ஜனாதிபதியாக பிரதமரே பணிபுரிய வேண்டும்.
ஜனாதிபதித்தேர்தல் 1981ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் படியே நடாத்தப்படுகின்றது.
ஜனாதிபதி நாட்டு மக்களின் நேரடியான வாக்குகள் மூலமே தெரிவு செய்யப்படுவார். பதவியின் இடைக்காலத்தில் ஜனாதிபதியாக பதவி வகிப்பவர் ராஜினாமாச் செய்தால் அல்லது மரணித்தால் அல்லது குற்றப் பிரேரணை மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் அவர் தெரிவு செய்யப்பட்ட முழுமையான பதவிக்காலத்தின் எஞ்சிய காலத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களால் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.
இதற்கு முன் ஒரு முறையே பாராளுமன்றம் ஜனாதிபதியைத் தெரிவு செய்துள்ளது. 1983 மே மாதம் முதலாம் திகதி மேதின ஊர்வலத்தின் போது அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அப்போதைய பிரதமராக இருந்த டீ.பி.விஜயதுங்க, ஐ.தே.க.வேட்பாளராகப் போட்டியிட்டு, ஏகமனதாகத் தெரிவானார். அதன் பின் பிரேமதாசவின் எஞ்சிய பதவிக் காலத்துக்கு டீ.பி. விஜயதுங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்தார்.
ஜனாதிபதிப் பதவியானது அரசியலமைப்பின் 38(1) ஆம் உறுப்புரைகளின் நியதிகளின் படி வறிதாகுமிடத்து இச்சட்டத்தின் ஏற்பாடுகள்
ஏற்புடையானதல் வேண்டும் என ஜனாதிபதி தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் கூறுகிறது ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்புவர் அந்த உறுப்பினர் சேவை செய்ய விரும்புகிறார் என்ற சம்மதத்தைப் பெற்றே பெயரை முன்மொழிய வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களதுபெயர்கள் பிரேரிக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் 3ஆம் பிரிவின் 2 ஆம் உப பிரிவுக்கமைய தேர்தலை நடாத்துவதற்கு திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
தேர்தலை நடாத்தும் தெரிவாட்சி அலுவலராக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமே பணிபுரிவார். அவரே பெயர் வரிசைப்படி அங்கத்தவர்களை வாக்களிப்பதற்கு அழைப்பு விடுப்பார். தெரிவாட்சி அலுவலரின் மேசை அருகே சென்று வாக்குச் சீட்டினைப் பெற வேண்டும். தெரிவாட்சி அலுவலர் வாக்குச் சீட்டில் உறுப்பினர் முன்னிலையிலே தனது கையொப்பத்தை இடல் வேண்டும்.
வேட்பாளர் எவரும் அளிக்கப்பட்ட வாக்குகளின் அரைவாசிக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறாத விடத்து தெரிவாட்சி அலுவலர் ஆகக் குறைந்த எண்ணிக்கையைப் பெற்ற வேட்பாளரை போட்டியிலிருந்து நீக்க வேண்டும். அத்துடன் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வேட்பாளருக்கென அளிக்கப்பட்ட வாக்கு எவ்வுறுப்பினரது இரண்டாம் விருப்புரிமையானது இத்தகைய விருப்புரிமை எந்த வேட்பாளருக்குப் பதியப்பட்டுள்ளதோ அந்த வேட்பாளருக்கான வாக்காக எண்ணப்பட வேண்டும். இதனை அவர் ஏற்கனவே பெற்ற வாக்குகளுடன் சேர்க்கப்பட வேண்டும். மொத்த வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் ஜனாதிபதிப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தெரிவாட்சி அலுவலர் அறிவிக்க வேண்டும்.
ஜனாதிபதி பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட அவருடைய எஞ்சிய பதவிக் காலத்துக்கான ஜனாதிபதியாக டீ.பி. விஜேதுங்க, 1993 மே 7ஆம் திகதி தெரிவானார். இவர் 1993 மே 7ஆம் திகதியிலிருந்து 1994 நவம்பர் 12ஆம் திகதி வரைபதவி வகித்தார். அப்போது பாராளுமன்ற சபாநாயகராக எம். எச். முஹம்மதும் செயலாளர் நாயகமாக நிஹால் செனவிரத்னவும் பதவி வகித்தனர். ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தலை அப்போதைய செயலாளர் நாயகம் நிஹால் செனவிரத்னவே நடாத்தி வைத்தார். அதற்கு முன் முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை டீ.பி.விஜேதுங்க பதில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார்.
ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் இந்த நிகழ்வை பாராளுமன்ற செய்தியாளராக நேரடியாக கண்டுகொள்ளும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. அதனை அறிக்கை இடுவதற்காக நான் அங்கு சென்றிருந்தேன்.
20ஆம் திகதி நடாத்தும் தேர்தல் தெரிவாட்சி அலுவலராகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க பணிபுரியவுள்ளார். 20ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் தெரிவாகும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவான 5 வருடத்தில் எஞ்சியுள்ள இரண்டு வருடங்களும் 6 மாத காலத்துக்குப் பதவி வகிப்பார். தெரிவாகும் ஜனாதிபதி பதில் ஜனாதிபதி என அழைக்கப்படுவதில்லை.
ஜனாதிபதி ஒருவர் பதவி இழந்தால் பிரதமர் அல்லது சபாநாயகர் பதில் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் பதவிக் காலத்தில் ஜனாதிபதியும் பிரதமர் ஆர். பிரேமதாசவும் பிரித்தானியாவின் இளவரசர் சாள்சின் திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது சுமார் ஒரு வார காலத்துக்கு அப்போதைய சபாநாயகராக இருந்த பேருவளை முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. பாக்கிர் மாகார் ஜனாதிபதியின் கடமைகளைப் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் படி சபாநாயகர் பதவி நாட்டின் மூன்றாம் நிலைப்பதவியாகும். அந்த வகையிலே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் பதில் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் இலங்கைப் பாராளுமன்றம் 39 வருடங்களின் பின் எதிர்வரும் 20 ஆம் திகதி இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்துள்ளது.
என்.எம்.அமீன்